பெண்களின் மனம் கவர்ந்த நாயகி

தஞ்சை மாவட்டத்தில் பட்டவர்த்தி என்ற கிராமத்தில் விசுவநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.

Update: 2019-01-01 11:59 GMT
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவ நாதர். இறைவி விசாலாட்சி அம்மன். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்திற்குள் நுழைந்ததும் பலி பீடம், நந்தி பகவான் இருக்க, அடுத்ததாக அர்த்த மண்டபம் உள்ளது. அதன் வலது புறம் அம்மன் விசாலாட்சி நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் வலது மேல் கரத்தில் அட்சய பாத்திரம், இடது மேல் கையில் பத்மம் ஏந்தியும், வலது கீழ் மற்றும் இடது கீழ் கரங்கள் அபய, வரத முத்திரைகளுடன் அன்னை வீற்றிருக்கிறாள். அர்த்த மண்டபத்தின் நுழைவுவாசலின் இடது புறம் சித்தி விநாயகர் திருமேனி உள்ளது.

அடுத்துள்ள கருவறையில் இறைவன் விசுவநாத சுவாமி, லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வடக்கு திசையில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மேற்கில் நிருதி விநாயகரும், பாலசுப்பிரமணியரும் தனித் தனி சன்னிதிகளில் உள்ளனர். வடக்கில் சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. மகாமண்டபத்தின் கிழக்குப் பகுதியில் சூரியன், பைரவர், சனிபகவான் ஆகியோர் அருள்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா இங்கு சிறப்பாக நடைபெறும். ஐப்பசி மாதம் கந்தசஷ்டி மற்றும் கார்த்திகை சோமவாரம் ஆகிய நாட்களில் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை பழ மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால், கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. தவிர துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ராகு கால பூஜைகளும் நடக்கிறது. இந்த நாட்களில் துர்க்கைக்கு 11 விளக்கேற்றி 11 வாரங்கள் வழிபட்டால், பெண்களின் மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும். இப்படி வேண்டுதல் நிறைவேறியவர்கள், திருமணத்திற்குப் பின் தம்பதியராக வந்து துர்க்கைக்கு அபிஷேக ஆராதனை செய்து, புத்தாடை அணிவித்து தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள நிருதி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று 16 தேங்காய்களை ஒரு மாலையாகக் கட்டி, விநாய கருக்கு சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. குருப்பெயர்ச்சி நாட்களில் இங்கு சிறப்பு ஹோமம் நடைபெறுவதுடன் தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

இங்கு அருள்பாலிக்கும் அன்னை விசாலாட்சி அம்மன் பெண்களின் மனம் கவர்ந்த நாயகியாக, அவர்களின் அனைத்து பிரார்த்தனைகளையும் தீர்த்து வைப்பதில் நிகரற்றவள் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.

அமைவிடம்

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தால் வைத்தீஸ்வரன் கோவில் பேருந்து தடத்தில் உள்ளது பட்டவர்த்தி என்ற திருத் தலம். மணல்மேட்டிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஆலயம் இருக்கிறது.

-மல்லிகா சுந்தர்

மேலும் செய்திகள்