தர்ம கர்மாதிபதி யோகம்

சமூகத்தில் பிரபலம் அளிக்கும் யோகங்களில் ஒன்றாக தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்துள்ளது. இந்த யோகம் உள்ளவர்களுக்கு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் உண்டு என்பது பரவலான ஜோதிட நம்பிக்கையாக உள்ளது.

Update: 2019-04-04 23:45 GMT
மனதில் நினைத்த விஷயங்கள் காரியமாக மாறு வதற்கு தர்ம ஸ்தானமான 9-ம் இடம் நல்ல முறையில் அமைந்திருக்க வேண்டும். விரும்பிய கல்வி, தொழில் அல்லது பணி, சொந்த வீடு, வாகனம் , நல்ல வாழ்க்கைத் துணை, அழகான, அறிவான குழந்தைகள், உடன் வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகிய விஷயங்களை 9-ம் இடத்தின் பலமே தீர்மானிக்கிறது. கடமையைச் சரியாகச் செய்தால் உயர்வு தானாக வரும் என்பதை 10-ம் இடமான கர்ம ஸ்தானம் காட்டுகிறது. தொழில் ஸ்தானமான இந்த இடம் செய்யும் செயல் எதுவானாலும், கடமை உணர்வோடு செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்துகிறது. இந்த யோகம், ஜாதகத்தில் அமைந்தவர்களுக்கு நல்ல தொழில் அல்லது உயர்ந்த நிறுவனத்தில் நல்ல பதவி, நிறைவான சம்பளம், நல்ல குடும்பம் என்று வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

முதல் நிலை தர்ம கர்மாதிபதி யோகம் என்பது இரு வீட்டு அதிபதிகளும் பரிவர்த்தனை அடைந்திருப்பது, அதாவது 9-க்கு உடையவர் 10-ம் இடத்திலும், 10-க்கு உடையவர் 9-ம் இடத்திலும் மாறி அமர்ந்திருப்பது ஆகும்.

இரண்டாம் நிலை தர்ம கர்மாதிபதி யோகம் என்பது இரு ஸ்தானங்களுக்கும் உரிய கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து திரிகோணம் அல்லது கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்திருப்பது ஆகும்.

மூன்றாம் நிலை தர்ம கர்மாதிபதி யோகம் என்பது இரு வீட்டு அதிபதிகளும் சாரப் பரிவர்த்தனை அடைவது ஆகும். அதாவது, 9-க்கு உடையவர் நட்சத்திரத்தில் 10-ம் அதிபதியும், 10-க்கு உடையவர் நட்சத்திரத்தில் 9-ம் அதிபதியும் அமர்ந்திருப்பது ஆகும்.

மேற்கண்ட நிலைகள் லக்ன ரீதியாக கணக்கிடப்படுகிறது. இதே அமைப்புகளை சந்திர ராசிக்கு ஒன்பது, பத்தாம் அதிபதிகளை கணக்கில் கொண்டும் யோக பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் இன்றைய ஜோதிட வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. தர்ம கர்மாதிபதி யோகம் லக்னத்திலிருந்து ஒன்பதாம் இடம் அல்லது பத்தாம் இடத்தில் ஏற்படுவது மிகவும் விசேஷமானது. 6,8,12 ஆகிய மறைவு ஸ்தானங்கள் சம்பந்தப்பட்டதாக இந்த யோகம் ஏற்படுவது சிறப்பான பலன்களை அளிப்பதில்லை.

மேலும் செய்திகள்