குடும்ப பிரச்சினை தீர்க்கும் உய்யகொண்டேஸ்வரர்

உஞ்சினியில் உள்ள உய்யகொண்டேஸ்வரர் ஆலயம்

Update: 2019-04-30 04:47 GMT
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான வழிபாட்டு ஆலயம் ஒன்று உண்டு. அதுவே உஞ்சினியில் உள்ள உய்யகொண்டேஸ்வரர் ஆலயம். இறைவன் பெயர் ‘உய்யகொண்டேஸ்வரர்.’ இறைவியின் திருநாமம் ‘உமையவள் பார்வதி.’

தமிழ் ஆண்டுகளில் 25-வது ஆண்டாக இருக்கும், ‘கர’ ஆண்டிற்கான வழிபாட்டுத் தலம் இது. அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான நீண்ட ஆயுளை வழங்கும் சக்தி வழிபாட்டுத் தலமும் இதுவே. ஒவ்வொரு ராகத்திற்கும் உரித்தான நட்சத்திரம் ஒன்று உண்டு. அந்த வகையில் அஸ்த நட்சத்திர மண்டலத்தைச் சேர்ந்தது ‘பவுனி ராகம்.’ அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த ராகத்தில் வரும் பாடல்களில் ஏதேனும் ஒன்றினை பாடியோ, கேட்டோ வருதல் அவர்களுக்கு நன்மை பயக்கும்.

இந்த ஆலயம் அமைந்துள்ள உஞ்சினி, ஒரு எழில் கொஞ்சும் கிராமம். ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் பிரகாரமும் அடுத்து நந்தி மண்டபமும் உள்ளன. அடுத்து மகாமண்டபமும் வலதுபுறம் அன்னை உமையவள் பார்வதியின் சன்னிதியும் உள்ளன. அன்னைக்கு நான்கு கரங்கள். தென் திசை நோக்கி நின்ற திருக் கோலத்தில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள் அன்னை.

எதிரே கருவறையில் இறைவன் உய்யகொண்டேஸ்வரர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். சுற்றிலும் நீண்டு உயர்ந்த திருமதில் சுவற்றினை உடைய இந்த ஆலய திருச்சுற்றில், கணபதி, சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சண்டீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். தேவக்கோட்ட தென் திசையில் தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் ஆலய தலவிருட்சமான வெள்ளெருக்கு உள்ளது. இந்தச் செடியின் கிளையில் இருந்து எடுக்கப்படும் நாரினை திரித்து, பிறந்த குழந்தைக்கு அரைஞாண் கயிறாக 10 நாட்கள் இடுப்பில் கட்டுவது இந்தப் பகுதி மக்களின் வழக்கமாக இருக்கிறது. இதனால் அந்த குழந்தைகளை விஷப் பூச்சிகள் அண்டாது, நோய் நொடிகள் தாக்காது என்பது நம்பிக்கையாக நிலவு கிறது.

இந்த ஆலயத்தில் 1962, 1979, 2004 ஆகிய காலங்களில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. இது ஒரு வைப்பு தலம். சம்பந்தராலும், அப்பர் அடிகளாலும் பாடல் பெற்ற தலம் இது. ஆலயத்தின் பின்புறம் ஆலய தீர்த்தமான திருக்குளம் உள்ளது. தேவர்கள் இரவில் இக்குளத்தில் நீராடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சீதா தேவி தனது பிள்ளைகளான லவ, குச சகோதரர்களோடு, இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டுள்ளார். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது.

கார்த்திகை தீபத்தன்று 1008 அகல் விளக்கு ஏற்றுவதுடன் 108 சங்காபிஷேகம் இறைவனுக்கு நடைபெறுகிறது. அன்று அன்னதானம் நடைபெறும். சிவராத்திரி, நவராத்திரி, வருடப்பிறப்பு, சோம வாரங்கள், விஜயதசமி போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுண்டு.

இங்கே அருள்பாலிக்கும் இறைவி உமையவள் பார்வதிக்கு, அஸ்த நட்சத்திரத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து வணங்கினால் கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என பக்தர்கள் கூறுகின்றனர்.

இது அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கான சிறப்பு ஆலயமாக இருந்தாலும், அனைவரும் இத்தலம் வந்து இங்குள்ள இறைவன் இறைவியை ஆராதித்து உரிய பலன் பெறுவது கண் கூடான உண்மை.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் இருந்து அகரம்பேட்டை வழியாக கல்லணை செல்லும் பேருந்தில் ஏறி, இளங்காட்டு பாதை என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உஞ்சினி திருத்தலம் உள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் இருந்து நகரப் பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

- ஜெயவண்ணன்

மேலும் செய்திகள்