மழை பெய்ய வேண்டி வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் பக்தர்கள் பங்கேற்பு

சென்னை வடபழனி முருகன் கோவிலில், மழை பெய்து நாடு செழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. இதில் பக்தர்களும் பங்கேற்றனர்.

Update: 2019-05-08 22:15 GMT
சென்னை,

2019-20-ம் ஆண்டு ஸ்ரீவிகாரி ஆண்டில் நல்ல பருவமழை பெய்து நாடு செழிக்க வேண்டும் என்பதற்காக முக்கிய கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்றும், அந்தந்த கோவில்களின் பாரம்பரியத்துக்கு உட்பட்டு இந்த யாகங்கள் நடத்திடலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி சமீபத்தில் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதன்படி சென்னை வடபழனி முருகன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வருண யாகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ல.ஆதிமூலம், செயல் அதிகாரி சித்ரா தேவி, மணியக்காரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் நிரம்பிய 21 கலசங்களுக்கு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அக்னி குண்டத்தில் வருண யாகம் நடத்தப்பட்டது. இதில் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

யாகம் முடிந்த பிறகு கலசங்களில் இருந்த புனித நீர் கோவிலை சுற்றிலும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அந்த நீரை கொண்டு கோவில் தெப்பக்குளம், கிணறு மற்றும் முருக பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதுகுறித்து கோவில் தக்கார் ல.ஆதிமூலம் கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை உத்தரவை ஏற்று, பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் மழைவேண்டி யாகம் நடத்தப்பட்டு இருக்கிறது. முருகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு இருக்கிறது. மழைவேண்டி யாகம் உள்ளிட்டவைகள் நடத்தி மனமுருகி வேண்டும்போது மழை பெய்து வளம் சேர்ந்திருப்பதை பல வரலாறுகள் கூறுகின்றன. சாஸ்திரங்களும் அதை நிரூபிக்கின்றன. அந்தவகையில் முழு நம்பிக்கையுடன் இந்த யாகத்தை நடத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்