அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி சிவசைலநாதர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளியில் உள்ள சிவசைலநாதர் கோவில் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2019-07-01 22:45 GMT
அரியாங்குப்பம்,

அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி சிவலிங்கபுரத்தில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் நேற்று பிரம்மோற்சவம் தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை மூலவர் சிவசைலநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.

அதனை தொடர்ந்து கணபதி பூஜையும் சிறப்பு யாக பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து கோவில் கொடிமரத்திற்கு பூஜைகளும் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க திருவிழா கொடியேற்றம் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகளின் உள்புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திரவிமானத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தொடர்ந்து விழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருகிற 8-ந் தேதி காலை 9 மணியளவில் ஆனித்திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 3 மணியளவில் திருக்கல்யாண உற்சவம், இரவில் குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

மறுநாள் 9-ந் தேதி காலை 8 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 10-ந் தேதி காலை 9 மணியளவில் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணியளவில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர், ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்