வளம் பல தரும் முனிகள்

ஏழு என்ற எண்ணிக்கையில் உள்ள சப்த கன்னிகளை வழிபடும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. அதே போல முனிகள் சிலரை கொண்டாடும் மரபும், பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. இந்த முனிகளுக்கு அபிஷேகங்கள் நடப்பதில்லை. அதே நேரத்தில் மலர்கள் சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

Update: 2019-10-01 15:55 GMT
முனிகளுக்கு சில இடங்களில் கல் திருமேனிகளும், சில இடங்களில் உற்சவத் திருமேனிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முனிகள் அனைவரும் பச்சையம்மனின் தவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த முனிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வாழ்முனீஸ்வரர்

அனைத்து பச்சையம்மன் ஆலயத்தில் மிகப்பெரிய வடிவத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் வாழ்முனீஸ்வரர். திருமாலின் மறுவடிவான இவர், அன்னை பார்வதிக்கு காவலராக விளங்குகிறார். வான் முட்டிய கோலத்தில் இருப்பதால் இவருக்கு ‘வான்முனி’ என்று பெயர். இதுவே மருவி ‘வாழ்முனி’யாக வழங்கப்படுகிறது.

உக்கிர மாமுனியான இவர், வலது கரத்தில் மேல் நோக்கிய நீண்ட வாளையும், இடதுகரத்தில் கீழ்நோக்கிய குத்து வாளான சலாகையும் ஏந்தியுள்ளார். ஊன்றிய வலது காலடியில் அக்னிவீரன் தலை உள்ளது. இவர் போரிட வரும் வீர ராட்சதனைக் கத்தியால் குத்திய கோலத்தில் அமர்ந்துள்ளார். அனைத்து முனிவர்களுக்கும் இவரே பிரதானம்.

குழந்தைக்கு உண்டாகும் பாலரிஷ்டங்கள் நீங்க, இவர் மடியில் குழந்தைகளைப் படுக்க வைத்து எடுப்பார்கள். இவருக்குச் சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் எதிரிகள் தொல்லை விலகும். மேன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

செம்முனி, கருமுனி

இவர் சிவபெருமானின் அம்சமாகத் தோன்றி, பச்சையம்மனுக்குக் காவல் தெய்வமாக விளங்குகிறார். வாழ்முனிக்கு அடுத்த நிலையில் இருக்கும் முனிகள், செம்முனி - கருமுனிகளாகும். கருமுனி, பெயருக்கு ஏற்றபடி கருமை நிறத்திலும், செம்முனி, செந்நிறத்துடனும் காட்சி தருகின்றனர். இவர்கள் நீண்ட வாளையும், சலாகையும் ஏந்தி காட்சி தருகின்றனர் இவர்கள் மந்திர தந்திரங்களில் சிறந்தவர்களாகவும், பக்தர்கள் வாழ்வில் வளத்தை அளிப்பவர்களாகவும் திகழ்கிறார்கள். மேலைக் கடலோரத்து செம்மலை, கருமலையில் இருந்து இவர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. மக்களைக் காக்கவும், பச்சையம்மனுக்கு காவலராக நிற்கவும், சிவபெருமானின் அம்சங்களாக கருமுனி, செம்முனிகள் பூமிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காலடியில் தீயகுணம் கொண்ட மந்திரவாதிகளின் தலைகளைக் காணலாம்.

வேதமுனி

இவர் தன் கைகளில் ஏடுகளைத் தாங்கி, வேத நூல்களை பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் தோற்றத்தில் காணப்படுவார். வேத நூல்களை கற்பவர் என்பதால், ‘வேதமுனி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஜடாமண்டலத்துடன் பிரமாண்ட மீசையும் கொண்டு காட்சி தருகிறார். இவர் வாழ்வில் நல்வழி காட்டுபவராக புகழப்படுகிறார்.

கும்பமுனி

கும்பத்தில் தோன்றிய முனிவர் அகத்தியர். இந்த அகத்தியரின் மறுவடிவமே கும்பமுனி ஆகும். அகத்தியரைப் போலவே, உருவத்தில் குள்ளமானவராக இவர் விளங்குகிறார். இவரை ‘முனிரத்தினம்’ என்றும் அழைப்பார்கள். செம்முனியும் அகத்தியரின் மறுவடிவம் என்று சொல்பவர்களும் உண்டு.

ஜடாமுனி

ரோம ரிஷியே ஜடாமுனியாக உள்ளார் என கூறப்படுகிறது. யோகப் பட்டை தரித்து, யோகாசனத்தில் பெரிய கூடைமுடிகளோடு இவர் காட்சி தருகிறார். அதிகமான ஜடைகளுடன் இருப்பதால், இவர் ‘ஜடாமுனி’ என வழங்கப்படுகிறார். குழந்தைகளுக்கு ஜடை விழுந்து முடி சிக்கலாகி விடும் போது இவருக்கு வேண்டிக் கொண்டு பயன்பெறுகின்றனர்.

நாதமுனி

இசையில் சிறந்து விளங்கும் நாரதரே ‘நாதமுனி’யாகக் கருதப்படுகிறார். முதுகில் நீண்ட சடை, எடுத்துக் கட்டிய ஜடாமகுடத்துடன், கையில் மகர யாழை இசைக்கும் தோற்றத்தில் இவர் காணப்படுகிறார். இவருக்கு விலங்கு போட்டு வைத்திருப்பார்கள். ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்றாலும், பூமியிலும் அவர் ஏதும் கலகம் செய்யாமல் தடுக்கும் நோக்கில், இந்த முனிக்கு விலங்கு பூட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இவர் துடிப்பாகவும், அச்ச மூட்டுபவராகவும் இருப்பதால் இவரை விலங்கு பூட்டி வைத்துள்ளதாகவும் மற்றொரு காரணம் கூறப்படுகிறது. இவரிடம் வேண்டி குழந்தைப்பேறு பெற்றவர்கள் பிறந்த குழந்தைக்கு நாதமுனி என பெயர் சூட்டி மகிழ்கின்றனர். இவருக்கு ‘பூவிலங்கு முனி’ என்ற பெயரும் உண்டு.

முத்துமுனி

முத்து மாலைகள், முத்து மகுடம், வெண்ணிற ஆடைகளைத் தரித்து வெண்மையான தோற்றத்தில் காட்சியளிப்பவர் முத்துமுனி ஆவார். பிரம்ம தேவரே ‘முத்துமுனி’யாக விளங்குகின்றார் என கூறப்படுகிறது. திருமாலின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமர்தான் ‘முத்துமுனி’ என்று சொல்பவர்களும் உண்டு. இவருக்கு ‘செட்டி முனி’ என்ற பெயரும் உண்டு. ஒரு சிலர் முருகப்பெருமானே முத்துமுனியாக இருப்பதாகவும் நம்புகின்றனர். இதனால் இவரை ‘முத்தையன்’ எனவும் அழைக்கிறார்கள்.

சிங்கமுனி

விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்தின் அம்சமே ‘சிங்கமுனி’ என கூறுகின்றனர். இவர் தனது கையில் வாளும், கேடயமும் கொண்டு விளங்குகிறார். முகம் சிலிர்த்த கோலத்தில் காட்சி தருகிறது. பிடரிகளுடன் கூடிய சிங்கமுகம் இவருக்கு அமைந்துள்ளது. இவரை வழிபாடு செய்தால், பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட துஷ்ட சக்திகள் அகலும். பெரும்பகை நீங்கும் என்பது நம்பிக்கை.

லாட முனி

பழங்காலத்தில் லாட தேசம் ஒன்று இருந்ததாகவும், அந்த தேசத்தைச் சார்ந்த முனியே ‘லாடமுனி’ என்றும் சொல்லப்படுகிறது. சில ஆலயங்களில் முனிகளின் வரிசையில், இந்த லாட முனியும் இடம்பெற்று இருப்பதைக் காணலாம். சில ஆலயங்களில் லாட சன்னியாசி என்ற பெயரில் இவர் வீற்றிருப்பார்.

சன்னியாசி முனி

முனிகள் கூட்டத்தில் உயரம் குறைந்த தனி மேடையில் இவரை தரிசனம் செய்யலாம். இவரை ‘சந்நாசி அப்பன்’ என்றும், ‘சன்னியாசி முனி’ என்றும் அழைப்பார்கள். இவர் கவுபீனம் (கோவணம்) தரித்து யோக தண்டத்துடன், புலித்தோலில் அமர்ந்து காட்சி தருவார். இவரோடு நாய் ஒன்றும் இருக்கும்.

ப.அ.பாலகுமாரன்

மேலும் செய்திகள்