நம் சந்ததிகள் சந்தோஷமாக இருக்க..

நமது நாட்டில், பெற்றவர்களை இறுதி காலம் வரை வைத்து காப்பாற்றுவது என்பது ஒரு ஆண் மகனின் கடமை. ஆனால் இந்த அவசர யுகத்தில் கடமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. இந்த கலியுகத்தில் பெற்றோரின் உடைமைகளுக்கு உரிமை கொண்டாடுபவர்களே அதிகம்.

Update: 2019-12-26 23:15 GMT
வயதான பெரியவர்களை இறுதிவரை உடன் வைத்துப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள் யார்?. அதனால் அவர்கள் அடையும் நன்மைகள் என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.

12-ம் இடம் மோட்ச ஸ்தானம். இறந்த பிறகு அடையும் நற்கதியை இது குறிக்கிறது. புண்ணியம் செய்தவர்களுக்கு சொா்க்க லோகத்தையும், பாவம் செய்தவர்கள் நரகத்தையும் அடைவார்கள் என்பது நெடுங்கால நம்பிக்கை.

ஒருவர் தன் குல தர்மத்தை கடைப்பிடிக்க வாரிசுகளை விட்டுச் செல்ல வேண்டும். அப்படி இல்லாதவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்தப் பாவத்தில் இருந்து தப்பிக்க புத்திர பாக்கியம் அவசியம்.

புத்திர பாக்கியம் ஏற்படுவது பூர்வ புண்ணியத்தால் தான். இந்த பூர்வ புண்ணியத்தையும் பெற உதவுவது 5-ம் பாவகம். இதில் இருந்து 5 மற்றும் 12-ம் பாவகத்திற்கு நெருங்கிய சம்பந்தம் உள்ளது என்பதை உணர முடியும். இதன் பொருள், ‘பெற்றவர்களை முறையாக பராமரித்து நற்கதி அடைய உதவுபவர் களுக்கே பூர்வ புண்ணிய பலத்தால் (புத்திரர்களால்) நற்கதி அடையும் பாக்கியம் கிடைக்கும்’ என்பதாகும்.

நான்கு வேதங்கள் கூறும் சித்தி, முக்தி, யோகம், ஞானம், மோட்சம் ஆகியவைகளில் 12-ம் பாவகம் அல்லது 12-ம் பாவக அதிபதியுடன் கேதுவும் சம்பந்தம் பெறுகிறது. மனிதனுக்கு ஆசையைத் தூண்டி இல்லற வாழ்வில் ஈடுபட வைப்பது ராகு. பொருள் தேடும் ஆசையில் மனிதன் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சினைகளான ஏமாற்றம், இன்பம், துன்பம், கடன், நோய், வழக்குகளே ஒருவனுக்கு பற்றற்ற வாழ்வையும், முக்தி வழி என்ற ஞானத்தையும் உணரச் செய்கிறது. காமம், கோபம், குரோதம், பொருள் பற்று ஆகியவை குறையும் போதுதான் ஒருவன் ஞான மார்க்கத்தை நாடுகிறான். எனவேதான் முக்தி அல்லது மோட்சத்தை வழங்க, ராகு-கேதுவை தகுதி வாய்ந்தவர்களாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஜனன கால ஜாதகத்தில் 9, 12-ம் இடங்களில் சனி நின்றவர்களே, தங்கள் பெற்றோரை இறுதி காலம் வரை வைத்து பராமரிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். 9-ம் இடம் ஒருவரின் பாக்கியத்தை பற்றி கூறும் இடம். 12-ம் இடம் ஒருவரின் தியாக மனப்பான்மையை பற்றி கூறும் இடம். முதியவர்களின் நற் கதிக்கு உதவுபவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் நிரம்பிய வாரிசுகள் கிடைக்கிறார்கள். அவர்களால் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. முதியோர்களை பராமரிக்க தவறியவர்களுக்கு, புத்திர பாக்கியமின்மை ஏற்படும். புத்திரர்கள் இருந்தாலும், அவர்களால் பயனற்ற நிலை உண்டாகும்.

ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு 12-ல் கேது, சனி இருப்பவர்களின் ஆன்மா எளிதில் அடங்காது. இவ்வாறு இருப்பவர்களை பராமரிக்க சிரமப்பட்டு, பலரும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். முதுமை காலத்தில் முறையாக பராமரிக்காத தனது வாரிசுகளுக்கு, தலைமுறையினருக்கு அத்தகைய ஆத்மாக்களால் தீராத சாபம் ஏற்பட்டு விடுகிறது.

12-ல் தனித்த கேது அல்லது சனி இருந்தால், 5 மற்றும் 9-ம் அதிபதியுடன் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தேவதையை உபாசனை செய்தால் நிச்சயம் சித்தியும் மோட்சமும் கிடைக்கும். ஆன்மா பிரியாமல் அவதிப்படுபவர்கள், தினமும் சிவ புராணம் பாராயணம் செய்ய வேண்டும். அல்லது அதை ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும்.

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான், நாம். நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள். நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் மரபணுக்கள் தான் நம் உடம்பில் இருக்கிறது. பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம், வெற்றி, தோல்வி, நோய், கர்மா ஆகிய அனைத்தும் மரபணு மூலம் சந்ததிகளுக்கு அனுப்பப்படுகிறது.

அவர்கள் வழியாக வந்த நமது தீய நிகழ்வுகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம். காலம் தன் கடமையை செய்யும் போது, அதன் குறுக்கே எந்தக் கடவுளும் நிற்பதில்லை. அதனால்தான் நேரம் நன்றாக இருக்கும் போது பலிக்கும் பிரார்த்தனை, நேரம் கெடும் போது பலிப்பதில்லை. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் அனைவருக்கும் வேண்டும்.

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள். நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள். நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க, நாம் நமது வாரிசுகள் பயன்படும் வகையில் புண்ணிய காரியம் செய்ய வேண்டும்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

மேலும் செய்திகள்