சிவ- விஷ்ணுவை இணைக்கும் சிவாலய ஓட்டம்

சிவபெருமானுக்குரிய முக்கிய விழாக்களில் மகா சிவராத்திரி முதன்மையானது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் கூட நம்மை விட்டு விலகும் என்பது ஐதீகம்.

Update: 2020-02-18 11:29 GMT
“சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்” என்று உமாதேவி வேண்டிக்கொண்டதாகவும், சிவபெருமானும் “அப்படியே ஆகட்டும்” என்று அருள்புரிந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

நாடு முழுவதும் சிவராத்திரி அன்று பக்தர்கள் விரதம் இருந்து இரவு முழுவதும் கண்விழித்து நான்கு யாம வழிபாடுகளில் பங்கேற்று சிவனை வழிபடுவது வழக்கம். ஆனால் குமரி மாவட்டத்தில் இந்த விழா வழக்கமான பூஜை வழிபாடுகளுடன் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு சிவாலயங்களை மையமாகக் கொண்டு, இந்த மகாசிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் பலரும், இந்த பன்னிரு சிவாலயங்களையும் “கோவிந்தா.. கோபாலா” என்ற கோஷங்களை எழுப்பியவாறு, ஓட்டமாகச் சென்று தரிசிப்பது இந்த நிகழ்வின் சிறப்பம்சம். மாரத்தான் ஓட்டத்தைப் போன்று நடைபெறுவதால், இதன் பெயர் ‘சிவாலய ஓட்டம்’ என்று வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே, குமரி மாவட்டத்தில் மட்டும்தான் இந்த சிவாலய ஓட்டம் என்ற புகழ்பெற்ற வழிபாடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

12 சிவாலயங்கள்

மகாசிவராத்திரி அன்று முன்சிறை திருமலை தேவர் (சூலபாணி) கோவில், திக்குறிச்சி சிவன் கோவில், திற்பரப்பு சிவன் (வீரபத்திரர்) கோவில், திருநந்திக்கரை நந்திகேஸ்வரர் கோவில், பொன்மனை (திம்பிலேஸ்வரர்) சிவன் கோவில், பன்னிப்பாகம் (கிராதமூர்த்தி) சிவன் கோவில், பத்மநாபபுரம் சிவன் (நீலகண்டர்) கோவில், மேலாங்கோடு (பெரிய கால காலர்) சிவன் கோவில், திருவிடைக்கோடு (கொடம்பீஸ்வரமுடையார்) சிவன் கோவில், திருவிதாங்கோடு (பிரதிபாணி) சிவன் கோவில், திருப்பன்றிக்கோடு (பக்தவச்சலர்) சிவன் கோவில், நட்டாலம் (அர்த்த நாரீஸ்வரர்) சிவன் கோவில் ஆகிய 12 சிவன் கோவில்களையும் பக்தர்கள் ஓட்டமாக ஓடிச் சென்று தரிசனம் செய்வர்.

‘சாலிய ஓட்டம்’ என பாமர மக்களால் அழைக்கப்படும் சிவாலய ஓட்டத்தில் ஆண்கள் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள். ஒரு சில பெண் பக்தர்களும் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குமரி மாவட்ட பக்தர்கள் மட்டும் அல்லாமல், கேரள மாநில பக்தர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள். ஓட்டமாக ஓட முடியாத பக்தர்கள் சைக்கிள், ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களில் சென்றும் 12 சிவாலயங்களையும் தரிசிக்கிறார்கள்.

விரதம்

சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள், மாசி மாத ஏகாதசிக்கு 7 அல்லது 8 நாட்களுக்கு முன்பே தங்களது விரதத்தைத் தொடங்கி விடுகின்றனர். விரத நாட்களில் பகல் நேரத்தில் இளநீர், நுங்கு ஆகியவற்றையும், இரவு நேரத்தில் துளசி இலையும் நீரும் பருகுகிறார்கள். கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை குருசாமி வழி நடத்துவதுபோல, இந்த சிவாலய ஓட்டத்தையும் ஒருவர் வழிநடத்துகிறார். ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் “கோவிந்தா.. கோபாலா,,” என்றும், “யாரைக் காண சாமியைக் காண, சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும்” என்ற கோஷங்களை முழங்கியவாறும் செல்வார்கள்.

பக்தர்கள் மஞ்சள் அல்லது சிவப்பு ஆடையை அணிந்தபடியும், கையில் பனை ஓலையால் ஆன சிறு விசிறியும், பணம் வைக்க சிறு துணிப்பையை இடுப்பில் கட்டியவாறும் சிவாலய ஓட்டம் ஓடுவார்கள். இவ்வாறு ஓட்டமாக ஓடிச்சென்று சிவாலயங்களை தரிசிப்பவர்கள், ஒவ்வொரு சிவன் கோவிலை அடுத்து இருக்கும் குளம் அல்லது ஆற்றில் குளிக்க வேண்டும் என்பதும் பழைய நடைமுறையாக இருக்கிறது. அதற்கு அடையாளமாக பெரும்பாலானோர் ஓட்டம் தொடங்கும் முதல் கோவிலான முன்சிறை திருமலை தேவர் கோவில் குளத்தில் மட்டும் குளித்துவிட்டு ஓடுவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர். ஓட்டத்தின்போது தென்னங்கீற்றுகளை இணைத்து உருவாக்கப்பட்ட பந்தம் அல்லது டார்ச் லைட் ஆகியவற்றை கொண்டு செல்வார்கள்.

சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, பானகரம், மோர், கஞ்சி போன்ற பானங்களை வழி நெடுகிலும் மக்கள் விநியோகம் செய்வார்கள். 12 கோவில்களில் கடைசி ஆலயமான, நட்டாலம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மட்டுமே சந்தனம் கொடுக் கிறார்கள். பிற கோவில்களில் திருநீறு மட்டுமே பிரசாதமாக வழங்கப்படும்.

நட்டாலத்தில் சங்கரநாராயணர் என்ற விஷ்ணு கோவிலும், அர்த்தநாரீஸ்வரர் என்ற சிவன் கோவிலுமாக இரண்டு கோவில்கள் உள்ளன. ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்று’ என இறைவன் உணர்த்திய இடம் நட்டாலம் ஆகும். இந்த 12 கோவில்களையும் தரிசித்தபிறகு, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற வழக்கமும் காலங்காலமாக இருந்து வருகிறது.

12 சிவாலயங்கள் உருவான கதை

மகாபாரத போர் முடிந்ததும் தர்மர் தனது பாவங்களை போக்க எண்ணினார். இதற்காக அவர் ஒரு யாகம் நடத்த முடிவு செய்தார். அந்த யாகத்திற்கு, மனிதனும், சிங்கமும் கலந்த புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டது. அதிக பலமும், கொடூர குணமும் கொண்ட அந்த மிருகத்தின் பாலைக் கொண்டுவர பீமனால்தான் முடியும் என்று கண்ணபிரான் கூறினார்.

ஆனால் அதற்கு பீமன் தயங்கினான். அப்போது கண்ணன், பீமனுக்கு ஊக்கம் அளித்தார். அதோடு அவனிடம் 12 ருத்ராட்சங்களையும் வழங்கினார்.

“பீமா! இந்த புருஷாமிருகம் சிவனைத்தவிர வேறு யாரையும் வணங்காது. விஷ்ணுவின் நாமத்தைக் கேட்டாலே அது கடுங்கோபம் அடையும். அதனால் நீ கோபாலா.. கோவிந்தா.. என்று சொல்லிக் கொண்டே போ. அது உன்னை துரத்தும். அப்போது நான் உன்னிடம் கொடுத்துள்ள 12 ருத்ராட்சங்களில் ஒன்றை எடுத்து தரையில் வை. அது சிவலிங்கமாக மாறும். உடனே அந்த மிருகம் சாந்தமடைந்து லிங்க பூஜை செய்யத் தொடங்கிவிடும். அப்போது அது ஆழ்ந்த பக்தி மயக்கத்தில் இருக்கும். அதுதான் நீ அதனிடம் இருந்து பாலை கறக்க சரியான தருணம்” என்று அறிவுறுத்தினார்.

காட்டிற்குச் சென்ற பீமன், புருஷாமிருகத்தைக் கண்டதும் “கோவிந்தா.. கோபாலா..” என்று கூறினான். அதைக் கேட்டு கோபம் அடைந்த அது, பீமனைக் கொல்ல வந்தது. பீமன் ஓட ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் பீமனுக்கு களைப்பு ஏற்பட, தன் கையில் இருந்த ருத்ராட்சத்தில் ஒன்றை தரையில் போட்டான். அது சிவலிங்கமாக மாறியது. சிவலிங்கத்தைப் பார்த்ததும் சாந்தமான புருஷா மிருகம், சிவபூஜை செய்யத் தொடங்கியது.

அப்போது அதனிடம் பால் கறந்தான் பீமன். ஆனால் உடனடியாக விழித்துக் கொண்ட புருஷாமிருகம், மீண்டும் பீமனை துரத்தியது. இப்படியே 12 ருத்ராட்சங்களையும் பீமன் போட்ட இடங்களில் 12 சிவலிங்கங்கள் தோன்றின. அந்த சிவலிங்கங்களை கண்டு சிவ பூஜை செய்யும் வேளையில், புருஷாமிருகத்திடம் இருந்து பீமன் பால் கறக்க முயற்சித்தான். இறுதிவரை அந்த எண்ணம் பலனளிக்க வில்லை. இதனால் பீமன் காட்டிற்குள் வெகுதூரம் ஓடினான். அவரை பிடித்த புருஷா மிருகம், “என்னுடைய இடத்தில் அகப்பட்டதால், நீ எனக்குத்தான் சொந்தம்” என்றது. அதன் பிடியில் இருந்த பலமை வாய்ந்த பீமனால் விடுபடமுடியவில்லை. அதே நேரம் 12 சிவலிங்கங்களும், 12 விஷ்ணுவாக உருமாறுவது புருஷாமிருகத்தின் அகக்கண்ணுக்குத் தெரிந்தது. அதன் பிறகே அதற்கு ஞானம் பிறந்து, பீமனை விடுவித்தது.

பீமன் காட்டில் ஸ்தாபித்த 12 லிங்கங்களும் நாளடைவில் 12 சிவாலயங்களாக உருவாகின. சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக இந்த நிகழ்வு நடந்ததாக சொல்லப்படுகிறது. பீமன் ஓடியதன் விளைவாகவே, சிவராத்திரி அன்று பக்தர்கள் அனைவரும் 12 ஆலயங்களுக்கும் ஓடியே வழிபடுகிறார்கள் என்றும், ‘கோபாலா.. கோவிந்தா..’ என்ற நாமத்தை உச்சரிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்