வாமதேவ முகத்தில் தோன்றிய ஈசனின் வடிவங்கள்

சிவபெருமானின் வடிவங்களை ‘மூர்த்தங்கள்’ என்றும் கூறுவார்கள். சிவபெருமான் 64 வடிவங்கள் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

Update: 2020-05-19 06:41 GMT
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்கிற 5 முகங்களில் இருந்து இந்த வடிவங்களை அவர் எடுத்தார். இந்த 64 வடிவங்களில் 25 வடிவங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இதில் வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய 5 வடிவங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சண்டேஸ்வரர்

சிறுவயது முதலே ஈசனின் மீது பக்தி கொண்டிருந்தார், சண்டேஸ்வரர். இவர் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார். அங்கு மணலால் லிங்கம் அமைத்து, பசும் பாலை அதில் ஊற்றி அபிஷேகம் செய்வார். இதனைக் கண்டு மாட்டின் உரிமையாளர்கள், சண்டேஸ்வரரின் தந்தையிடம் கூறினர். ஒரு நாள் மறைந்திருந்து பார்த்த சண்டேஸ்வரரின் தந்தை, மகன் செய்யும் செயலைப் பார்த்து ஆத்திரம் அடைந்து, அங்கு கிடந்த கம்பை எடுத்து சண்டேஸ்வரரை அடித்தார். சிவபூஜைக்கு இடையூறு செய்த தந்தையை, அதே கம்பை வாங்கி காலில் அடித்தார் சண்டேஸ்வரர். அது வாளாக மாறி, அவரது தந்தையின் கால்களை துண்டித்தது. அப்போது அங்கு தோன்றிய சிவபெருமான், சண்டேஸ்வரருக்கு அருள்பாலித்ததுடன், அவரது தந்தையையும் நலம்பெறச் செய்தார்.

கஜாந்திகர்

ஐராவதம் என்னும் வெள்ளை யானைக்கு அருள்பாலித்த மூர்த்தியே, ‘கஜாந்திகர்’ ஆவார். இவரை ‘கஜாரி’ என்றும் அழைப்பார்கள். பிட்சாடனராக வடி வெடுத்த சிவபெருமான், முனிவர்களின் பத்தினிகளை தன் அழகால் மயக்கினார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள், பெரும் யாகம் செய்து ஈசனை கொல்ல யானையை ஏவிவிட்டனர். அந்த யானையின் வயிற்றுக்குள் புகுந்து வெளிவந்த சிவபெருமான், யானையின் தோலை தனது ஆடையாக்கிக்கொண்டார். இந்த வடிவத்திற்கு ‘கஜாந்திகர்’ என்று பெயர்.

ஏகபாத மூர்த்தி

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பிரளயம் தோன்றி, மீண்டும் உலகம் தோன்றும் என்பது இந்துமத நம்பிக்கை. அப்படி யுகங்களின் முடிவில் அண்ட சராசரங்களும் அழித்து, அவை யாவும் சிவபெருமானிடம் ஏகபாதத்துடன் ஒடுங்கும். இதுவே ஏகபாத மூர்த்தி வடிவமாகும். இந்த திருஉருவத்தின் ஒரு பக்கம் பிரம்மனும், மறு பக்கம் திருமாலும் இடம்பெற்றுள்ளனர்.

க்கரதானர்

ஸ்ரீசக்கரம் எனப்படும் சுதர்சன சக்கரத்தைப் பெறுவதற்காக, சிவ பெருமானை தினமும் ஆயிரம் மலர்கொண்டு அர்ச்சித்து வந்தார், திருமால். ஒரு நாள், ஆயிரம் மலர்களுக்கு ஒரு மலர் குறைவாக இருந்தது. இதனால் மலருக்கு பதிலாக, தனது கண்ணை எடுத்து, மலராக பாவித்து அர்ச்சனை செய்தார். திருமாலின் செய்கையில் உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு காட்சி தந்ததோடு, சுதர்சன சக்கரத்தையும் வழங்கி அருள்புரிந்தார். இதனால் ஈசனுக்கு ‘சக்கரதானர்’ என்ற பெயர் உண்டானது. விக்கினங்கள் எனப்படும் தடைகளை அகற்றும் மூர்த்தி இந்த சக்கரதானர் ஆவார்.

கங்காளமூர்த்தி

மகாபலி மன்னனின் ஆணவத்தை அழிப்பதற்காக, திருமால் ‘வாமன அவதாரம்’ எடுத்தார். பின்னர் மூன்றடி மண் கேட்டு, மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து, அவரை பாதாள உலகத்திற்கு தள்ளினார். வானளாவ நின்ற வாமனனை கட்டுப்படுத்த எவராலும் முடியவில்லை. அவரால் உலக உயிர்கள் துன்புற்றன. இதனால் சிவபெருமான், வச்சிரதண்டம் எடுத்து வாமனனின் மார்பில் அடித்தார். பின்னர் வாமனின் தோலை உரித்து ஆடையாக தரித்துக் கொண்டார். வாமன னின் முதுகெலும்பை எடுத்து தண்டமாக கையில் வைத்துக் கொண்டார். இந்தக் கோலமே ‘கங்காள மூர்த்தி’ எனப்படுகிறது. ‘கங்காளம்’ என்ற சொல்லுக்கு ‘எலும்பு’ என்று பொருள்படும். திருச்செங்காட்குடி திருத்தலத்தில் இந்த திரு உருவத்தை தரிசிக்கலாம்.

மேலும் செய்திகள்