நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்!

‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்- அது நாராயணன் என்னும் நாமம்’ என்பர் ஆன்மிகப் பெரியோர்கள். ஸ்ரீமன் நாராயணன், காக்கும் கடவுள். அவரது அபயகரம் பாதத்தை நோக்கி இருக்கும்.

Update: 2020-12-14 23:30 GMT
தன்னை சரணடைந்தவர்களுக்கு சந்தோஷத்தை வழங்குவார். அப்படிப்பட்ட இறைவனை, திருமாலை, நாராயணமூர்த்தியை வழிபட உகந்த ‘வைகுண்ட ஏகாதசி’ திருநாள் இம்மாதம் வருகின்றது.

பாற்கடலில் துயிலும் பரந்தாமனுக்குப் பல விழாக்கள் இருந் தாலும், வைகுண்ட ஏகாதசி பக்தர்களின் மனதில் இடம் பெற்ற பக்தித் திருவிழாவாகும். இந்த ஏகாதசியன்று ‘சொர்க்க வாசல் நுழைதல்’ என்ற விழா விஷ்ணு ஆலயங்கள் தோறும் நடைபெறும். மார்கழி மாதம் 10-ம் தேதி (25.12.2020) வெள்ளிக்கிழமை வைகுண்ட வாசனுக்குரிய ஏகாதசி திருநாளில் இந்த விழா வருகின்றது.

மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘உற்சத்தி ஏகாதசி’ என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர்.

ஏகாதசியன்று அவல், வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் மதியம், இரவு பலகாரம் மட்டும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொழுது, இறை நாமத்தையே உச்சரிக்க வேண்டும். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னால் நீராடி பச்சரி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.

இந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு அதன் மத்தியில் பரங்கிப் பூவை வைத்து அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி ஆண்டாள், விஷ்ணுவை வழிபட்டு சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறியதை நாம் அறிந்திருக்கிறோம்.

இப்படி சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சி பெருகும். வருங் காலம் நலமாகும்.

விஷ்ணுவை வழிபட்டு அவரது துணையாக விளங்கி செல்வத்தை நமக்களிக்கும் லட்சுமியின் சன்னிதிக்கும் சென்று லட்சுமி வருகைப் பதிகம் பாடி னால், இல்லம் தேடி லட்சுமி வந்து அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்குவாள். அஷ்டலட்சுமியின் படத்தையும், விஷ்ணு படத்தோடு இணைத்து பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது நல்லது. அவல் நைவேத்தியம் செய்தால் ஆவல்கள் நிறைவேறும்.

எட்டு வகை லட்சுமியால் ஏராளமான செல்வம்

கொட்டும்வகை நானறிந்தேன்! கோலமயில் ஆனவளே!

வெற்றியுடன் நாங்கள் வாழ வேணும் ஆதிலட்சுமியே!

வட்டமலர் மீதமர்ந்து வருவாய் இதுசமயம்.

என்று பாடுங்கள்.

எட்டுவகை லட்சுமியும் வேண் டும் அளவிற்குச் செல்வமும், வெற்றி வாய்ப்பும் உங்களுக்கு வழங்குவர்.

மேலும் செய்திகள்