பாண்டவர்களுக்காக தூது சென்ற பெருமாள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது திருப்பாடகம் என்ற ஊர். காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. இங்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

Update: 2021-02-02 00:49 GMT
பாண்டவ தூதப் பெருமாள்
இந்தக்கோவிலில் மூலவராக வீற்றிருக்கும் பாண்டவ தூதப் பெருமாள், 25 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் மிகப் பிரமாண்டமாக திருக்காட்சி தருகிறார். தாயார்களாக சத்யபாமா மற்றும் ருக்மணி தேவியர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு மிக்கதாக இருப்பது, கிருஷ்ண அவதாரம் என்றால் அது மிகையல்ல. இந்த அவதாரத்தின் போது, பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் தொடக்கம் முதலே பிரச்சினையாக இருந்தது. ஒரு கட்டத்தில் பாண்டவர்களை சூதாட அழைத்து, அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, 13 வருடம் வனவாசம் மேற்கொள்ளச் செய்தனர். வனவாசம் முடிந்து வந்ததும், பாண்டவர்கள், தாங்கள் ஆட்சி செய்ய 5 ஊர்களை வாங்கித் தரும்படி கிருஷ்ணரிடம் முறையிட்டனர். அப்படி 5 ஊர்களைத் தரவில்லை என்றால், 5 வீடுகளையாவது கேட்டுப் பெற்று வரும்படி கூறினர்.

பாண்டவர்கள் கேட்ட 5 வீடுகளைக் கூட கொடுக்கவில்லை என்றால், பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையில் போர் மூண்டுவிடும். அதைத் தவிர்க்கும் பொருட்டு, பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ண பகவான், கவுரவர்கள் வீற்றிருக்கும் அஸ்தினாபுரம் சபைக்கு தூதனாகச் சென்றார். கிருஷ்ணர்தான், பாண்டவர்களின் மிகப்பெரிய பலம் என்பதை, துரியோதனன் அறிந்திருந்தான். எனவே அவர்களுக்காக தூது வரும் கிருஷ்ணரை அவமதிக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காக அஸ்தினாபுரம் அரண்மனையில் கிருஷ்ணர் அமர்வதற்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, நாற்காலி போடப்பட்டது. முன்பாக அந்த நாற்காலியின் கீழே ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு, அதன்மேல் பந்தலைப்போட்டு மறைத்தான், துரியோதனன்.

அவன் திட்டப்படியே அரண்மனைக்குள் வந்த கிருஷ்ணர், தனக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் போய் அமர்ந்தார். உடனே அந்த நாற்காலி பள்ளத்திற்குள் விழுந்தது. அந்த பள்ளத்திற்குள்ளேயே கிருஷ்ணரை கொன்றுவிட துரியோதனன், தன்னுடைய காவலர்களுக்கு உத்தரவிட்டான். அப்படி ஒரு ஆணை வந்ததும், சில மல்லர்கள், அந்த பள்ளத்திற்குள் குதித்து கிருஷ்ணரை தாக்க முயன்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டி ஓங்கி உயர்ந்து நின்றார், கிருஷ்ண பகவான். அதைப் பார்த்து அவையில் இருந்த அனைவருமே மிரண்டு போயினர்.

பாண்டவர்களுக்காக தூது போன கண்ணன், ‘பாண்டவ தூதப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் ‘தூதஹரி’ என்று கிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரருக்கு கண்பார்வை கிடையாது. ஆனால் அவர் கிருஷ்ணனின் அந்த விஸ்வரூப காட்சியை பார்க்க விரும்பினார். அவருக்கு ஒரு கண நேரம் கண் பார்வை அளித்து, தன்னுடைய விஸ்வரூப காட்சியை கிருஷ்ணர் காட்டி அருளிய தலம் இது என்று சொல்லப்படுகிறது.

குருசேத்திரப் போர் முடிந்து பல காலங்கள் கடந்த பின்னர், ஜனமேஜயன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். இவர் அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்து மகாராஜாவின் மகன் ஆவான். ஜனமேஜயன், ஒரு முறை வைசம்பாயனர் என்ற மகரிஷியிடம் மகாபாரதக் கதையைக் கேட்க வந்தான். அப்போது அவன், கிருஷ்ண பகவான் அஸ்தினாபுரத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை, நிலவறையில் அமர்ந்த கோலத்தில் பார்க்க விரும்புவதாகவும், அதற்கான வழிமுறையை கூறும்படியும் ரிஷியிடம் கேட்டான். ரிஷி கூறிய அறிவுரையின்படி, இந்த தலத்திற்கு வந்து அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தவம் இருந்தான், ஜனமேஜயன். அவனுக்கு தன்னுடைய பாரத கால தூது கோலத்தை அமர்ந்தபடி காட்டியருளினார், பெருமாள்.

இந்த ஆலயத்திற்கு அருளாளப் பெருமாள் என்ற ஆச்சாரியார் வந்திருந்தார். அப்போது அவர் ராமானுஜருடன் 18 நாட்கள் வாதம் செய்தார். பின்னர் ராமானுஜரை சரணடைந்தார். இவர் நிறைய மகான்களுக்கு ஆச்சாரியராக இருந்திருக்கிறார். அதே போல் மணவாள மாமுனிகளும் இந்த ஆலயத்திற்கு எழுந்தருளியுள்ளார்.

27 நட்சத்திரங்களில் ஒருத்தியான ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக கிருஷ்ண பகவானை வழிபாடு செய்தாள். அதன்படி சந்திரனை மணம் முடித்தாள். ஆனாலும் அவளோடு மற்ற 26 நட்சத்திர தேவியரையும் மணம் முடிக்கும் சூழல் சந்திரனுக்கு ஏற்பட்டது. அப்போதும் கூட ஞான சக்திகளைக் கொண்ட ரோகிணியை முதலாவதாகவும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையை அடுத்ததாகவும் மணந்த பிறகே, ஏனைய நட்சத்திர தேவிகளை சந்திரன் மணந்தான். ரோகிணி இந்த ஆலயத்தில், தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனத்தையும் தந்தருளிய பெருமாளை சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

மேலும் செய்திகள்