கம்பகரேஸ்வரர் திருக்கோவில்: கடன் தொல்லை விலக..

கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில், மயிலாடுதுறை வழித் தடத்தில் இருக்கிறது ‘திருபுவனம்.’

Update: 2021-03-23 16:43 GMT
இங்கு கம்பகரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கம்பகரேஸ்வரர், இறைவி- அறம்வளர்த்த நாயகி. இந்த ஆலயத்தில் சரபேஸ்வரருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரப பட்சியின் வடிவத்தை சிவபெருமான் எடுத்தார். இந்த பறவையானது, சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபமாக கருதப்படுகிறது. சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரரை, 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் 
சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். அதோடு கடன் தொல்லைகள் அகலும். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரமானது, இவரை வழிபட சிறந்த நேரமாகும்.

வறுமை நிலை அகல..
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டரில் உள்ளது, திருச்சேறை திருத்தலம். இங்கு செந்நெறியப்பர் கோவில் அமைந்துள்ளது. ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள், அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற்பிறவி தீவினைகள் நீங்கவும், இப்பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் இந்த ஆலயத்தில் அருளும் செந்நெறியப்பரை வணங்கலாம் என்கிறது தல வரலாறு. இதனால்தான் இந்த இறைவனை ‘ரிண விமோஷன லிங்கேஸ்வரர்’ என்றும் 
அழைக்கிறார்கள். 11 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக இத்தல இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வறுமையும், கடன்களும் தீரும்.

மேலும் செய்திகள்