பாவ வாழ்க்கையை மாற்றுங்கள்..

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்.

Update: 2021-05-10 20:16 GMT
கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர் (எசாயா: 55:6,7).

லூக்கா 19-ம் அதிகாரத்தில் சக்கேயு என்ற மனிதரை பற்றி கூறப்பட்டுள்ளது. இயேசு எரிகோவுக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்த சக்கேயு, அவரைப் பார்க்கும் ஆவலில் அதற்கு என்ன வழி என்று தேடினார். அதற்கு ஒரு தடை இருந்தது. அவர் மிகவும் குள்ளமாய் இருந்தார். மேலும் அங்கு ஏற்கனவே இயேசுவை காண்பதற்கு மக்கள் திரளாய் கூடி நின்றிருந்தனர். அதனால் அவரால், இயேசுவை நெருங்கிப் பார்க்க முடியவில்லை.

சக்கேயு பெரிய செல்வந்தர் மட்டுமல்ல, அவர் வரிதண்டுவோருக்குத் தலைவராகவும் இருந்தார். அவருக்கு கீழ் பலர் வேலை செய்தனர். ஆனாலும் அவர் அதை பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. அவருடைய உள்ளத்தில் ‘இயேசுவை காண வேண்டும்’ என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. எனவே தன்னுடைய தகுதி மற்றும் அந்தஸ்தை அவர் ஒரு பொருட்டாக எண்ணாமல், அங்கிருந்த ஒரு காட்டு அத்தி மரத்தின் மேல் ஏறினார். ஏனெனில் அந்த வழியாகத்தான் இயேசு வருகிறார் என்பதை அவர் முன்பே அறிந்திருந்தார்.

தங்களது தேவைக்காக இயேசுவை தேடி வந்த மக்களின் மத்தியில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரை காண வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே மரத்தின் மீது ஏறி இருந்தார், சக்கேயு. ‘மனிதனோ முகத்தை பார்க்கிறான் தேவனோ உள்ளத்தை காண்கிறார்’ என்ற வசனத்தின்படி, சக்கேயுவின் அன்பை உணர்ந்த இயேசு, தாமாகவே சக்கேயு ஏறி அமர்ந்திருந்த மரத்தின் அருகில் வந்தார்.

வந்தவர் அவரை பார்த்து, “சக்கேயு.. விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.

சக்கேயு, யாரை தான் காண வேண்டும் என்று ஆர்வமுடன் வந்தாரே, அவரே தன்னுடைய வீட்டிற்கு வருகிறேன் என்கிறாரே என்ற ஆனந்தத்தில், ஆர்வமாய் மரத்திலிருந்து இறங்கி வந்தார். பின்னர் இயேசுவை வணங்கி, அவரை தன்னுடைய வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றார்.

சக்கேயுவையும், அவர் செய்யும் தொழிலையும் பற்றி அறிந்த மக்கள், அவரை ‘பாவி’ என்று அழைத்தனர். ‘ஒரு பாவியின் வீட்டிற்கு இயேசு செல்கிறார்’ என்று அவர்கள் கூறிக்கொண்டனர். ஆனால் அனைத்தையும் அறிந்த தேவன், சக்கேயுவை குற்றப்படுத்தவும் இல்லை, குறை கூறவும் இல்லை.

இயேசுவின் அழைப்பை ஏற்ற சக்கேயு, மரத்தில் இருந்து மட்டும் இறங்கி வரவில்லை, தன்னுடைய பாவ வாழ்க்கையை விட்டும் விலகி வந்தார். தன்னுடைய பாவத்தை பற்றி இயேசு எதுவும் கூறாத போதும், சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால், நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று இயேசுவிடம் கூறினார்.

தன்னை சுற்றியிருந்த ஒவ்வொருவராலும் பாவி என்று இழிவாக கருதப்பட்ட சக்கேயு, தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைவிட, அதற்கு பரிகாரம் செய்வதை முக்கியமாகக் கருதினார். அதனால்தான் மன்னிப்பதில் தாராள மனம் படைத்தவராக இருந்த இயேசு கிறிஸ்து, தாமாகவே சக்கேயுவின் செயல்களைப் பார்த்து அவரை நோக்கி இவ்வாறு கூறினார். “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

இறைவனின் அழைப்பு என்பது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. அதனை நாம் ஏற்கும் விதம்தான் மாறுபடுகிறது. தொடக்க நூலில் ஆதாம் - ஏவாள் பாவம் செய்ததால், இறைவனுக்கு பயந்து தோட்டத்தில் ஒரு மரத்தின் பின் மறைந்து இருந்தார்கள். கடவுள் தாமே அவர்களை அழைத்தபோதும், அவரை எதிர்கொள்ள முடியாமல் தவித்து நின்றனர். கீழ்படியாமையால் பாவம் செய்த அவர்கள் இருவரும், தங்களின் பாவத்தை குறித்து வருந்தவும் இல்லை; அதற்கான பரிகாரத்தை தேடவும் இல்லை. செய்த செயலுக்கு மற்றவர்களை காரணம் காட்டினர்.

ஆனால் சக்கேயுவோ, இறைவன் தனக்கு விடுத்த அழைப்பை ஏற்று, அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு மீட்பை அடைந்தார். எனவே இந்த நாளில் நாமும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் இந்த தருணத்திலேயே, பாவ வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்வோம். அத்துடன் நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களின் பாதிப்புக்கு ஈடாக நம்மால் இயன்ற உதவிகள் செய்யும் வரத்தையும், பலத்தையும் இறைவனிடம் மன்றாடி கேட்போம்.

மேலும் செய்திகள்