காரியங்களை வெற்றியாக்கும் கடற்கரை திருத்தலங்கள்

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஏராளமான திருக்கோவில்கள் அமைந்திருக்கின்றன. அதிலும் கடற்கரை ஓரம் அமைந்த தலங்கள் மேலும் சிறப்புக்குரியவை. அப்படி கடற்கரையோரம் அமைந்த ஆலயங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

Update: 2021-05-25 17:05 GMT
மருந்தீஸ்வரர் கோவில்

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது, இந்த ஆலயம். இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இத்தல இறைவனின் பெயர், ‘மருந்தீஸ்வரர்’ என்பதாகும். ‘ஒளசதநாதர்’, ‘பால்வண்ணநாதர்’ என்றும் இறைவனை அழைக்கிறார்கள். அகத்தியருக்கு இத்தல இறைவன், வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்தார். அதோடு அவருக்கு உலகில் தோன்றும் நோய்களுக்கான மருந்துகளைப் பற்றியும், மூலிகைகளின் தன்மை பற்றியும் உபதேசம் செய்தார். இதன் காரணமாகவே இறைவனுக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. அம்பாளின் திருநாமம் ‘திரிபுரசுந்தரி’, ‘சவுந்திரநாயகி’ என்பதாகும்.

செந்திலாண்டவர் கோவில்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில் இதுவாகும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலமாக இது விளங்குகிறது. இங்குதான் சூரபதுமனை எதிர்த்து, முருகப்பெருமான் படை திரட்டி போராடினார் என்கிறது தல வரலாறு. சூரனை வதம் செய்த திருத்தலம் இதுவாகும். இங்கு சுப்பிரமணியர், சண்முகநாதர் என்ற பெயரில் இரண்டு சன்னிதிகளில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். வள்ளிக்கு தனியாக குகை ஒன்றில் சன்னிதி அமைந்திருக்கிறது. முருகப்பெருமானுக்கு கடற்கரையோரம் அமைந்த ஒரே தலம் இது என்று சொல்லப்படுகிறது.

காயாரோகணேஸ்வரர் கோவில்

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இங்குள்ள இறைவன் ‘காயாரோகணேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘நீலாயதாட்சி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப்போலவே, இதுவும் அம்பாளை முன்னிலைப்படுத்தும் திருத்தலமாக இருக்கிறது. புண்டரீகர் என்னும் முனிவர், முக்தி வேண்டி இத்தல இறைவனை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி கொடுத்த இறைவன், முனிவரை ஆரத்தழுவி முக்தியை வழங்கினார். இதன் காரணமாகத்தான், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. இங்கு தல விருட்சமாக மாமரம் உள்ளது. இந்த மரத்தில் உள்ள பழமானது, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இந்த மாமரத்தை கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் இருந்து பார்த்தால், நந்தி வடிவத்தில் காட்சியளிக்கும்.

குமரி அம்மன் கோவில்

மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருப்பதால், இந்தக் கோவில் அதிக சிறப்பைப் பெறுகிறது. கன்னியாகுமரியில் இருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள அம்மன், திருமணம் ஆகாமல் கன்னியாக இருப்பதால், ‘குமரி அம்மன்’ என்று பெயர் பெற்றாள். இந்த திருத்தலமும், ‘கன்னியாகுமரி’ ஆனது. சக்தி பீடத் தலங்களில் இதுவும் ஒன்று. பாணாசுரன் என்ற அரக்கனை அம்பாள் அழித்த தலம் இதுவாகும்.

அஷ்டலட்சுமி கோவில்

சென்னை பெசன்ட் நகரில், எலியட்ஸ் கடற்கரையில் இருக்கிறது, இந்தக் கோவில். இந்த ஆலயமானது, மொத்தம் நான்கு தளங்களால் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி தேவியர்கள் அருள்காட்சி தருகின்றனர். இரண்டாவது தளத்தில், திருமகளுடன் திருமால் திருமணக் கோலத்தில் தரிசனம் தரு கிறார். இந்த திருமணக் கோலத்தை வழிபட்ட பிறகே, பிற தெய்வங்களை வழிபட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது. மூன்றாவது தளத்தில் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, கஜலட்சுமி ஆகிய தேவியர்கள் வீற்றிருக்கின்றனர். நான்காவது தளத்தில் தனலட்சுமி தாயார் அருள்பாலிக்கிறார்.

சுயம்புலிங்க சுவாமி கோவில்

திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில், உவரி என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரின் கடற்கரை ஓரத்தில்தான், சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் சுயம்புவாக தோன்றியதால், ‘சுயம்புலிங்கம்’ என்று பெயர். அம்பாளின் திருநாமம், ‘பிரம்மசக்தி அம்மன்’ என்பதாகும்.

ராமநாதர் கோவில்

ராமாயணத்தோடு தொடர்புடைய ஆலயமாக இந்தக் கோவில் பார்க்கப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் என்ற ஊரில் கடற்கரையோரமாக இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் சீதாதேவி மணலால் வடித்த சிவலிங்கம், ‘ராம நாதர்’ என்ற பெயரில் உள்ளது. மேலும் ஆஞ்சநேயர், காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கமும், ‘காசி விஸ்வநாதர்’ என்ற பெயரில் இங்கு இருக்கிறது. ராமபிரான், தன்னுடைய மனைவி சீதையோடு இணைந்து இந்த ஆலயத்தில் சிவபெருமானை வழிபாடு செய்திருக்கிறார் என்கிறது தல வரலாறு.

மேலும் செய்திகள்