திருமாலின் திருப்பாதமாக கருதப்படும் ‘நம்மாழ்வார்’

சடாரி, பெருமாளின் திருபாதங்கள் என்றும், அதனால்தான் அதை தலையில் வைத்து ஆசி வழங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Update: 2021-06-22 00:12 GMT
பெருமாள் ஆலயங்களுக்குச் செல்பவர்கள் ‘சடாரி’யைப் பற்றி அறிந்திருப்பார்கள். சிறிய அளவிலான கிரீடம் போல் இருக்கும் அந்த சடாரியை, கோவில் அர்ச்சகர், பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவார். இந்த சடாரி, பெருமாளின் திருபாதங்கள் என்றும், அதனால்தான் அதை தலையில் வைத்து ஆசி வழங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

பக்தர்களுக்கு சடாரி ஆசி வழங்கப்படுவதற்கு, வைணவ சம்பிரதாய முறைப்படி ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்ததும், இந்த பூவுலகத்தில் உள்ள மாயை, அந்தக் குழந்தையை பிடிக்கும் வகையில் செயல்படும் வாயுவிற்கு ‘சடம்’ என்று பெயர். ஒவ்வொரு குழந்தையும், கர்ம வினைகளுக்குக் கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும் பொழுது, அதன் உச்சந்தலையில் ‘சடம்’ என்ற காற்று படுகிறது. அந்த காற்று பட்டதும், அது தன்னுடைய முன் ஜென்ம நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக்கொள்வதாக ஐதீகம். இந்த சடம் என்ற காற்று படுவதால்தான், பிறந்தவுடன் குழந்தைகள் அழுவதாகவும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த ‘சடம்‘ என்ற வாயுவால் பாதிக்கப்படாதவர், 12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார். இவர் ஆழ்வார்திருநகரில் காரியார்-உடையநங்கை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்தபோது, இயற்கைக்கு மாறாக அழாமல் இருந்தார். இதனாலேயே இவருக்கு ‘மாறன்’ என்ற பெயர் வந்தது. நம்மாழ்வார், தாயின் கருப்பையில் இருக்கும் போதே, ‘சடம்’ என்ற வாயுவை கோபமாக பார்த்ததால் ‘சடகோபன்’ என்றும் அழைக்கப்பட்டார்.

வைணவ குரு பரம்பரையில், திருமால், திருமகளுக்கு அடுத்தபடியாக குரு நிலையில் வைத்து வணங்கப்படுபவர் ‘விஷ்வக்சேனர்.’ இவரது அம்சமாக பிறந்தவராகவே நம்மாழ்வார் பார்க்கப்படுகிறார். மேலும் திருமாலின் திருவடி அம்சம் என்றும் இவரை குறிப்பிடுவார்கள். அதன் அடிப்படையில், கோவிலில் குடிகொண்டுள்ள பெருமாளின் பாதங்களில், சடகோபம் என்ற சடாரி வைக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் அது பக்தர்களின் தலையில் வைக்கப்படுகிறது. அதாவது நம்மாழ்வாரையே, பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது. சடாரி ஆசி பெறுவதன் மூலமாக ஒருவரது மனதில் உள்ள ஆணவம் அகன்று, அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக நம்பிக்கை. ஆலயத்தில் நமக்கு சடாரி ஆசி வழங்கப்படும்போது, தலை குனிந்து, புருவங்களுக்கு மத்தியில் வலது கை நடுவிரலை வைத்து, வாய் பொத்தி அதை ஏற்றுக்கொள்வது முறையாகும்.

மேலும் செய்திகள்