அமர்நீதி நாயனாரை வாட்டி வதைத்த ஈசன்

சோழவள நாட்டில் உள்ள பழையாறை என்ற பகுதியைச் சேர்ந்தவர், அமர்நீதி நாயனார். வணிக குலத்தில் பிறந்த இவர், சிறந்த சிவபக்தராக திகழ்ந்தார். இவர் பட்டு, பருத்தி ஆடை, பொன், நவரத்தினங்கள் போன்றவை, எந்த பகுதியில் சிறப்பாக இருக்குமோ, அங்கேயே சென்று கொள்முதல் செய்து வந்து அதை நியாயமான விலைக்கு விற்று தொழில் செய்து வந்தார்.

Update: 2021-07-15 12:30 GMT
அதில் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு சிவபெருமானுக்கும், அவரது அடியவர்களுக்கும் தொண்டாற்றிவந்தார்.சிவனை முதன்மை தெய்வமாக ஏற்ற அடியார்களுக்கு, அரைஞாணுக்கு கீழே கட்டும் கீழாடை மற்றும் கோவணத்தை வழங்கி வந்தார். சிவனடியாருக்கு செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார். அமர்நீதி நாயனார், திருநல்லூர் தலத்திற்குச் சென்று அங்குள்ள ஈசனை வழிபடுவது வழக்கம். எப்போதும் ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பார். திருநல்லூர் திருத்தலத்தில் திருவிழா வந்தால், அன்னதானம் வழங்குவார். 

அடியவர்களுக்கு ஆடைகளை தானம் செய்வார். நாளடைவில் திருநல்லூரில் மடம் ஒன்றை நிறுவினார். இதற்காக தன்னுடைய குடும்பத்துடன், அங்கேயே குடியேறினார்.அமா்நீதி நாயனார், தன் மீதும் தன்னுடைய அடியார்கள் மீதும் கொண்டுள்ள அன்பை உலகறியச் செய்ய வேண்டும் என்று எண்ணினார், சிவபெருமான். அதன்படி சிவ அடியார் போல் வேடம் பூண்ட சிவபெருமான், திருநல்லூர் திருத்தலத்திற்கு வந்து, அங்கு வசித்து வந்த அமர்நீதிநாயனாரை சந்தித்தார். சிவனடியாரைக் கண்டதும், அவரை வணங்கி வரவேற்று மகிழ்ந்தார், அமர்நீதி நாயனார்.அடியவர் உருவில் வந்த இறைவன், “அன்பனே.. உன்னுடைய வள்ளல் தன்மையை அறிந்துதான், இங்கு வந்தேன். உன்னைப் பார்த்து ஆடைகள் வாங்க வந்தேன்” என்றார்.அதைக் கேட்டு மகிழ்ந்த 
அமர்நீதி நாயனார், “சுவாமி.. அது என் பாக்கியம். முன்பாக தாங்கள் இங்கு அளிக்கப்படும் உணவை சாப்பிட்டு பசியாற வேண்டும்” என்று அடியவரை வேண்டினார். “சரி.. உணவருந்துகிறேன். அதற்கு முன்பாக நான் நீராட வேண்டும். எனவே ஆற்றக்கரைக்குச் சென்று வருகிறேன். வானம் மேகமூட்டமாக காணப்படுவதால், என்னிடம் இருக்கும் கோவணம் நனைந்து விட வாய்ப்பிருக்கிறது. எனவே நான் வரும் வரை பத்திரமாக வைத்து கொடுப்பாயாக” என்று கூறி தன்னுடைய கைத் தடியில் முடிந்து வைத்திருந்த இரண்டு கோவணத்தில் ஒன்றை அவிழ்த்துக் கொடுத்தார். அமர்நீதி நாயனார் அதைப் பெற்றுக்கொண்டார்.

அடியவர் கொடுத்த கோவணத்தை, தனியொரு இடத்தில் அமர்நீதி நாயனார் வைத்திருந்தார். காவிரியில் நீராடி விட்டு திரும்பிய இறைவன், அமர்நீதி நாயனாரின் திருமடம் நோக்கி வந்தாா். அப்போது அவர் முழுவதுமாக மழையில் நனைந்ததுபோல் காணப்பட்டார். அவரது உடைகளும், கைத்தடியில் முடிந்து வைத்திருந்த மற்றொரு கோவணமும் கூட, நீரில் நனைந்து போயிருந்தது. அவர் அமர்நீதி நாயனாரிடம், “என் உடைகள் நனைந்துவிட்டன. உன்னிடம் இருக்கும் என்னுடைய கோவணத்தை எடுத்துவா” என்று கட்டளையிட்டார். திருமடத்தில் வைத்திருந்த கோவணத்தை எடுக்கச் சென்ற 
அமர்நீதி நாயனார், அதைக் காணாது திகைத்தார். அங்கிருந்த பலரிடம் கேட்டும், அது பற்றி எவருக்கும் தெரியவில்லை. அடியவர் ஈரத்துடன் நிற்கிறாரே என்று நினைத்தவர், தன்னிடம் இருந்ததில் சிறந்த கோவணத்தை எடுத்துக் கொண்டு போய் அடியவரிடம் நீட்டினார்.

“சுவாமி.. தாங்கள் கொடுத்த கோவணத்தை தனியொரு இடத்தில் வைத்திருந்தேன். அது எப்படியோ காணாமல் போய்விட்டது. என்னை மன்னிக்க வேண்டும். வேறு ஒரு நல்ல கோவணம் கொண்டுவந்திருக் கிறேன். தங்கள் உடையை களைந்து விட்டு, இதை அணிந்து கொள்ளுங்கள்” என்று வேண்டினார், அமர்நீதி நாயனார்.கடும் கோபம் கொண்டார், அடியார். “நான் வைத்திருந்த உயர்ந்த கோவணத்தை தொலைத்து விட்டாயா? அல்லது திருடிக்கொண்டாயா?” என்று கேட்டார். அதைக் கேட்டு பதறிய அமர்நீதி நாயனார், “சுவாமி.. நான் திருடவில்லை. உங்கள் கோவணம் காணாமல்தான் 
போய்விட்டது. அதற்கு பதிலாக வேறு ஒரு உயர்ந்த கோவணத்தைத் தருகிறேன். இல்லை என்றால் பொன், பொருள், நவமணிகளைத் தருகிறேன்” என்றார். “நீ தரும் பொன், பொருளை வைத்து நான் என்ன செய்வது. என்னிடம் இருந்த கோவணம் மதிப்பு மிகுந்தது. தற்போது என்னிடம் ஈரமாக உள்ள இந்த கோவணத்தை தராசின் ஒரு தட்டில் வைக்கிறேன். அதற்கு நிகரான எந்த ஒரு பொருளை வேண்டுமானாலும் நீ தரலாம்” என்றார், அடியவர்.

நிம்மதி பெருமூச்சு விட்ட அமர்நீதி நாயனார், தராசின் ஒரு பக்கத்தில் அடியவரின் கோவணத்தையும், மற்றொரு பக்கத்தில் தன்னிடம் இருந்த உயர்தர கோவணத்தையும் வைத்தார். ஆனால் தராசு நேராகவில்லை. பல ஆடைகளை வைத்தார். இப்போதும் தராசு நேராகவில்லை. பொன், நவமணிகள் கொண்டு வந்து குவித்தார். தராசு முள் அசையக்கூட இல்லை. இறுதியில் தன்னுடைய மனைவி, பிள்ளைகளுடன், தானும் தராசு தட்டில் ஏறி நின்று, “நான் சிவதொண்டில் எந்த ஒரு பிழையும் செய்யாமல் இருந்தது உண்மையானால், தராசு நேராகட்டும்” என்று ஈசனை வேண்டினார். மறு நொடியே தராசு முள் நேரானது.

அப்போது அடியவர் மறைந்து, அங்கே இடப வாகனத்தில் சிவபெருமான் காட்சியளித்தார். அவர் முன்பாக அமர்நீதி நாயனார், தன்னுடைய குடும்பம் சகிதமாக விழுந்து வணங்கினார். ஈசன் அவர்களை ஆட்கொண்டு சிவலோகம் அழைத்துச் சென்றார்.

மேலும் செய்திகள்