அம்பாளுக்கு காட்சி தந்த சங்கரநாராயணர்

‘தபசு’ என்பதற்கு ‘தவம்’ என்று பொருள். பார்வதி தேவி, ‘சிவனும் விஷ்ணுவும் வேறுவேறல்ல’ என்பதை மெய்ப்பிப்பதற்காக, சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்தாள். தவத்தின் முடிவில் சிவபெருமான் அன்னைக்கு, ‘சங்கரநாராயணர்’ கோலத்தில் காட்சி தந்தார். அம்பாளின் தவத்தை குறிப்பிடும் வகையில்தான் ‘ஆடித் தபசு’ விழா கொண்டாடப்படுகிறது.

Update: 2021-07-20 06:34 GMT
அம்பாள் குடிகொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் ‘ஆடித்தபசு’ கொண்டாடப்படும் என்றாலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோமதி அம்மன் உடனாய சங்கரநாராயணர் திருத்தலம் ‘ஆடித்தபசு’ விழாவுக்கு பெரும் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.

முன்காலத்தில் இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் சிவன் மீதும், மற்றொருவர் விஷ்ணுவின் மீதும் பக்தி கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ‘சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா?’ என்ற வாதம் எழுந்தது. இதை நிவர்த்தி செய்ய அம்பாளிடம் முறையிட்டனர்.

இருவருமே சம பலம் வாய்ந்தவர்கள் என்பதை அந்த நாக அரசர்களுக்கு நிரூபிக்க நினைத்த அம்பாள், ஊசி முனையில் நின்று கடுமையான தவத்தை மேற்கொண்டாள். இதையடுத்து ஈசன், ‘சங்கர நாராயணர்’ கோலத்தில் நாக அரசர்களுக்கு காட்சி தந்தார். பின் அவர் சங்கரலிங்கமாக மாறினார். அந்த லிங்கத்தை நாக அரசர்கள் இருவரும் வழிபட்டு வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல லிங்கத்தையும், நாகத்தையும் புற்று மண் மூடியது.

பின்னாளில் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது ரத்தம் வெளிப்பட்டது. உடனடியாக பாண்டிய மன்னனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மன்னன் வந்ததும் புற்று மண் அகற்றப்பட்டது. அப்போது அங்கே ஒரு லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஆலயம் எழுப்பினான்.

இந்த ஆலயத்தில் சிவன் சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்கும் இடையில் ‘சங்கரநாராயணர்’ தனிச் சன்னிதி கொண்டு அருள்புரிந்து வருகிறார். இதில் சிவனுக்குரிய வலது பக்கத்தில் தலையில் கங்கை, பிறைசந்திரன், ஜடாமுடி, நெற்றிக்கண், காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித் தோல் ஆடை ஆகியவை உள்ளது. இடது பக்கத்தில் விஷ்ணுவுக்குரிய நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி, லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் காணப்படுகிறது. இந்த சன்னிதியில் காலையில் நடைபெறும் பூஜையின் போது துளசி தீர்த்தமும், மற்ற நேர பூஜைகளில் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கரநாராயணருக்கு, சிவனுக்குரிய வில்வ மாலையும், விஷ்ணுவுக்குரிய துளசி மாலையும் அணிவிக்கப்படுகிறது.

இந்தத் திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக புற்றுமண் வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த புற்றுமண் பிரசாதத்தை தண்ணீரில் கரைத்து அருந்துகிறார்கள். வீடுகளில் விஷப்பூச்சிகளின் தொல்லை இருந்தால், பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வரும்போது, அந்த பூச்சி களின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வேண்டிக்கொண்டால், விஷப்பூச்சிகளின் தொல்லை மறையும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் கோமதியம்மன்தான் முதன்மையான தெய்வமாக கருதப்படுகிறாள். ‘கோ’ என்பது பசுவைக்குறிக்கும். பசு அனைத்து உயிர்களுக்கும் ஒப்பானது. தவம் இயற்ற பூமிக்கு வந்த அம்பாளின் முகம், முழு சந்திரனைப் போல பிரகாசித்தது. சந்திரனுக்கு ‘மதி’ என்றொரு பெயர் உண்டு. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமானவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘கோமதி’ என்ற பெயர் உண்டானது. இந்த ஆலயத்தில் அன்னைக்கு செய்யப்படும் ‘மலர் பாவாடை’, ‘தங்க பாவாடை’ அலங்காரம் மிகவும் சிறப்புக்குரியது.

ஆடித் தபசு விழா சங்கரன்கோவிலில் 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அம்பாளுக்கான விழா என்பதால், அம்மன் மட்டுமே தேரில் பவனி வருவாள். விழாவின் கடைசி நாளில், அம்மன் தவமியற்றுவாள். அன்று மாலை அம்மனுக்கு சங்கரநாராயணர் திருக்காட்சி தருவார். அதன்பிறகு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து ஆலயத்திற்குள் செல்வார். அந்த நேரத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் செய்திகள்