செல்வரும், லாசரும்! -இயேசு போதித்த உவமை

செல்வம் சேர்ப்பதையே நோக்கமாக வைத்திருந்தவர்களுக்கு, இயேசு ஒரு உவமை வழியே போதித்தார். அதுவே செல்வரும், லாசரும் உவமை. அதன் கருத்துக்களை உள்வாங்கி கொள்வோம். மக்கள் கூட்டத்தின் முன்பு இயேசு கூறியதாவது...

Update: 2021-07-20 06:44 GMT
செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். லாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

செல்வர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில் ஆபிரகாமையும், அவரது மடியில் லாசரையும் கண்டார். அவர், “தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். லாசர் தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்” என்று உரக்கக் கூறினார்.

அதற்கு ஆபிரகாம், “மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய். அதே வேளையில் லாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார், நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது” என்றார்.

அவர், “அப்படியானால் தந்தையே, லாசரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே” என்றார். அதற்கு ஆபிரகாம், “மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்” என்றார்.

அவர், “அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்” என்றார். ஆபிரகாம், “அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்” என்றார்.

பணத்தை சேர்ப்பதோடு, கொஞ்சம் புண்ணியத்தை சேர்க்க வலியுறுத்துகிறது, ‘செல்வரும் லாசரும்’ உவமை. செல்வரிடம் பொருள் இருந்தது, ஆனால் அருள் இல்லை. லாசரிடம் பொருள் இல்லை. பொறுமை இருந்தது. இதைதான் இயேசு ‘‘செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’’ என்றார்.

உலகில் வாழும் மனிதர் அனைவரும் சரிநிகர் சமமாகப் பிறப்பதில்லை. நாம் இறைவனிடமிருந்து பெற்ற செல்வங்களை, இல்லாதவர்களுடன் பகிர்ந்தளித்து உதவுவதே வாழ்வின் நோக்கம் என்பதை ஆபிரகாம் வாயிலாக இயேசு அறிவிக்கிறார். தம்மிடம் தேவைக்கு மிஞ்சிய உணவு இருந்தபோதும், கண்ணெதிரில் கிடந்த ஏழை லாசருக்குச் செல்வர் இரங்கவில்லை. மரணத்திற்குப்பின் இப்போது அதை அவர் உணர்ந்தார். எனவே, மேற்கொண்டு அவர் ஆபிரகாமிடம் வாக்குவாதம் செய்யவில்லை. உலக வாழ்வில் இரக்கமில்லாமல் வாழ்ந்த செல்வர், மரணத்திற்குப்பின் தம் குற்றத்தை உணர்ந்தாலும், அவர் மன்னிக்கப்படவில்லை. எனவே அது செல்வரின் உள்ளத்தில் நிலைத்திருந்து, என்றும் அவரை வதைத்துக்கொண்டே இருக்கிறது.

மேலும் செய்திகள்