நன்மைகள் வழங்கும் நவராத்திரி

அம்பாளை வணங்குவதற்கு உகந்த நாட்களில், நவராத்திரி வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ என்று பொருள். ஒன்பது இரவுகள், அம்பாளை முப்பெரும் தேவியர்களின் வடிவங்களில் இந்த நவராத்திரி வழிபாட்டை செய்கிறோம்.

Update: 2021-10-05 13:45 GMT
தேவர்களை துன்புறுத்தி வந்த மகிஷன் என்ற அசுரனை அழிப்பதற்காக தோன்றியவள் மகாசக்தி. இவள் எருமை தலை கொண்ட மகிஷனுடன், ஒன்பது நாட்கள் தொடர்ந்து போரிட்டு 10 நாளில் வெற்றி பெற்றாள். இதனையே ‘நவராத்திரி’ தினமாகவும், இறுதி நாளை ‘விஜயதசமி’யாகவும் கொண்டாடி வருகிறோம்.

புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் விரதங்கள், இரவு நேர பூஜை வழிபாடுகளோடு நடைபெறும். பத்தாம் நாளான அம்பிகை, அசுரனை வெற்றிகொண்ட தசமி திதியுடன் இந்த விழா நிறைவுபெறும். ஒன்பது நாள் நவராத்திரி பூஜையில், முதல் மூன்று நாட்கள் துர்க்கா தேவியை வழிபட வேண்டும். நமக்குள் மறைந்திருக்கும் தீய எண்ணங்களை அழித்து, நல்ல மனிதனாக்கும் இச்சா சக்தியாக இந்த அன்னை திகழ்கிறாள். அடுத்து வரும் மூன்று நாட்கள் மகாலட்சுமியை வழிபட வேண்டும். மனித வாழ்விற்குத் தேவையான எல்லா செல்வங்களையும் தரவல்ல கிரியா சக்தியாக இந்த அன்னை இருக்கிறாள். இறுதியில் வரும் மூன்று நாட்களும் சரஸ்வதியை வழிபாடு செய்ய வேண்டும். மனிதர்கள் மோட்சம் அடைய வழிகாட்டும் ஞான சக்தியாக இந்த அன்னை இருக்கிறாள்.

நவராத்திரி வழிபாடு நாட்களில், வீடுகளிலும் வைணவக் கோவில்களிலும் வைக்கப்படும் கொலு, மிகவும் பிரசித்திப் பெற்றது. பலவிதமான தெய்வ, மகான், மனித பொம்மைகளை, படிகள் அமைத்து அதில் அடுக்கி வைப்பார்கள். ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்படும் பொம்மையை வைத்து என்னை வழிபடுபவர்களுக்கு, நான் சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி பாகவதத்தில் அம்பாள் கூறியிருக்கிறார். எனவேதான் நவராத்திரி நாட்களில், அம்பிகைக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து அலங்கரித்து அவளது அருளை வேண்டுகின்றனர். மனிதன் படிப் படியாக ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து பரிணாம வளர்ச்சி பெற்று, இறுதியில் கடவுளுடன் இரண்டறக் கலக்க வேண்டும் எனும் தத்துவத்தையே கொலுப்படிகளும், அதில் வைக்கப்படும் பொம்மைகளும் உணர்த்துகின்றன.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும், அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும். துர்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும், சரஸ்வதி அஷ்டோத்திரமும் படித்து வணங்க வேண்டும். சிறுவயது பெண் பிள்ளைகள், கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களை அம்மன் வடிவமாக ஆராதிக்க வேண்டும். சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து, வீட்டில் தங்களால் முடிந்த அளவில் கொலுப் படிகள் அமைத்து அலங்கரித்து வழிபட வேண்டும். மேலும் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் மனமும், வயிறும் நிறையும் வகையில் செய்ய வேண்டும். இதன் மூலம் அம்பிகையின் அருளை நாமும் பெறலாம்.

மேலும் செய்திகள்