திருப்பம் தரும் திருவிடைமருதூர்

மருத மரம் நிறைந்த பகுதியை ‘அர்ச்சுனம்’ என்பார்கள். ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் - மல்லிகார்ச்சுனம் (தலை மருது), திருவிடைமருதூர் - மத்தியார்ச்சுனம் (இடைமருது), திருப்புடைமருதூர்- புடார்ச்சனம் (கடைமருது).

Update: 2021-12-07 05:34 GMT
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் மூலவர் ‘மகாலிங்கம்’, ‘மகாலிங்கேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

* இந்த ஆலயத்தின் நான்கு திசைகளிலும் லிங்கங்கள் உள்ளன. கீழ வீதியில் விசுவநாதர்கோவில், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோவில், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோவில், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோவில் இருக்க, நடுநாயகமாக மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இது ‘பஞ்சலிங்க தலம்’ என்றும் அழைக்கப் படுகிறது.

* திருவலஞ்சுழி விநாயகர், சுவாமிமலை முருகன், சேய்ஞசலூர் சண்டிகேஸ்வரர், சூரியனார்கோவில் சூரிய பகவான் முதலான நவக்கிரகங்கள், சிதம்பரம் நடராஜர், சீர்காழி பைரவர், திருவாவடுதுறை நந்தி ஆகிய பரிவாரத் தலங்களுடன், மையத்தில் மூலமூர்த்தியாக மகாலிங்கப் பெருமான் இருக்கிறார். எனவே இது ‘மூல லிங்க தலம்’ எனப் படுகிறது.



பட்டினத்தாரும், மன்னனாக இருந்து பட்டினத்தாரின் சீடராக மாறிய பத்திரகிரியாரும், இந்த ஆலயத்தின் இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.

இத்தல இறைவனுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி கொண்டு அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்தியாவில் இரண்டு இடங்களில்தான் மூகாம்பிகைக்கு சிறப்புவாய்ந்த சன்னிதி உள்ளது. ஒன்று கர்நாடக மாநிலம் கொல்லூர், மற்றொன்று இந்தத் திருத்தலம். இந்த சன்னிதியில் மகா மேரு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பாளின் திருநாமம் ‘பெருமுலையாள்’, ‘ப்ரஹத் சுந்தர குஜாம்பிகை’ என்பதாகும்.

மூலவர் சன்னிதிக்கு தென்பகுதியில் விநாயகர் சன்னிதி உள்ளது. இவர், மகாலிங்கப் பெருமானை பஞ்சாட்சர விதிப்படி பூஜித்து வருகிறார். மேலும் இந்த இடத்தில் இருந்து தனது அருட்சக்தியால் உலகை விநாயகர் ஆள்வதாக சொல்கிறார்கள். எனவே இவருக்கு ‘ஆண்ட விநாயகர்’ என்று பெயர்.
மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். திருமண வரம், குழந்தை வரம், வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, தொழில்விருத்தியும் உண்டாகும்.





 
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மேலும் செய்திகள்