அலைமோதும் கூட்டம்.. தி.மலையில் 2-வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

பவுர்ணமி கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

Update: 2024-05-23 22:58 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் இரவு 7.09 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் காலை 8 மணி வரையில் அதிகமாகவே காணப்பட்டது. பின்னர் கூட்டம் குறையத் தொடங்கியது.

பவுர்ணமி நேற்று இரவு 7.44 மணி வரை இருந்தது. இதனால் 2-வது நாளாக நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டதால் பக்தர்கள் தனித் தனியாக எந்தவித சிரமமுமின்றி கிரிவலம் சென்றனர். பவுர்ணமி கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் பொது தரிசனம் வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக தெரிவித்தனர். வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் வசதி செய்து இருந்தாலும் தண்ணீர் பாட்டில், மோர், பிஸ்கட் போன்றவற்றை வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்