விஜயேந்திர மடத்தில் வைணவ சாமிகள் எழுந்தருளும் நிகழ்ச்சி
கும்பகோணத்தில் சித்திரை திருவிழாவின் 2-ம் நாளாக விஜயேந்திர மடத்தில் வைணவ சாமிகள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.;
கும்பகோணம்;
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரைப் பெருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சாரங்கபாணி மற்றும் சக்கரபாணி சாமிகள் கும்பகோணம் விஜயேந்திர மடத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு அன்னியர்களின் படையெடுப்பின் போது, கோவில்களும் அதில் இருந்த சாமி சிலைகளும் சேதப்படுத்த முயற்சி நடந்தது. அப்போது, விஜயேந்திர தீர்த்த சுவாமிகள், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி மற்றும் சக்கரராஜா ஆகிய 2 உற்சவர் சிலைகளை பாதுகாத்து, தனது மூலராமர் சிலையுடன் 3 கால பூஜைகள் செய்து வழிபட்டு, மீண்டும் இக்கோவில்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்தார். இதன் நினைவாக ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் 2-வது நாளில் சாரங்கபாணி மற்றும் சக்கரராஜா விஜயேந்திர மடத்துக்கு சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.அதன்படி சாரங்கபாணி மற்றும் சக்கரபாணி சுவாமிகள், சோலையப்பன் தெருவில் உள்ள விஜயேந்திர மடத்துக்கு நேற்று எழுந்தருளி காட்சியளித்தனர். தொடர்ந்து மடத்தின் சம்பிரதாயப்படி சாலிகிராம பூஜையும், கோவில் அர்ச்சகர்களால் திருவடி திருமஞ்சனம் கண்டருளல் நடைபெற்றது. இரவு மீண்டும் வீதிஉலாவாக, சாரங்கபாணி சக்கரபாணி சாமிகள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டனர்.