வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.;
மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர நூல், பன்னிரு திருமுறைகளில் 10 திருமுறையாக இடம்பிடித்துள்ளது. இதனை இயற்றியவர், திருமூலர் என்னும் சித்தர். இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:- காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும் அவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய் தானே.
விளக்கம்:-
ஒவ்வொரு நாட்களும், காலையில் மலர்ந்து, மாலையில் மறைகின்றது. மனிதனின் வாழ்நாள் இவ்வாறாக, சுருங்கிக் கொண்டிருப்பதை அனைவரும் உணரவேண்டும். இறைவன் உயிர்களிடத்து அருள் இல்லாதவரைப் போல பலருக்கும் தோன்றும். ஆனால் உலகின் நிலையாமையை உணர்ந்து, இயற்கையோடு பொருந்த நினைப்பவர்களுக்கு, இறைவன் இன்பத்தை வாரி வழங்குவார்.