வருமான வரி கணக்கு தாக்கல்

இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

Update: 2018-10-16 22:30 GMT
ந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தற்போது ஆண்டுக்கு 2½ லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய்வரை உள்ள வருமானத்துக்கு 5 சதவீதவரியும், 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்வரை உள்ள வருமானத்துக்கு 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்குமேல் உள்ள ஆண்டு வருமானத்துக்கு 30 சதவீதமும் வருமான வரியாக வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, ஒவ்வொருவருடைய வருமான வரியிலும், 4 சதவீதம் மேல் வரியாகவும் வசூலிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாய்வரை உள்ள வருமானத்துக்கு வருமான வரி கிடையாது. இதுபோல, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம்வரை உள்ள வருமானத்துக்கு வருமான வரி கிடையாது. 

2017–18–ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் பொறுத்தமட்டில் ஆகஸ்டு மாதம் 31–ந்தேதி கணக்குப்படி, இந்த ஆண்டு 5 கோடியே 42 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 3 கோடியே 17 லட்சம் பேர்தான் வருமானவரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த எண்ணிக்கை 71 சதவீதம் அதிகரித்துள்ளது. மாதசம்பளம் வாங்குகிறவர்கள் மட்டும் இ–மெயில் மூலம் 3 கோடியே 37 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 2 கோடியே 19 லட்சம் பேர்தான் மாதசம்பளம் பெறுகிறவர்கள் என்ற கணக்கில் இ–மெயில் மூலம் கணக்கு தாக்கல் செய்திருந்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு சேவைவரி, வருமானவரி கட்டவேண்டும் என்று ஏற்படுத்தப்பட்ட ஊக்கம், வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் போன்ற காரணங்கள்தான் இந்த ஆண்டு வருமானவரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதற்கு காரணமாகும். ஆனால், இதில் எத்தனை பேர் வருமானவரி கட்டினார்கள், எத்தனை பேர் வரி இல்லை என்று கூறியிருக்கிறார்கள் என்பது அடுத்த சிலநாட்களில்தான் தெரியும். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப் பட்ட நேரத்தில், வங்கிகளில் ரூ.10 லட்சத்துக்குமேல் டெபாசிட் செய்து, இதுவரை வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத 3 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கடந்த 158 ஆண்டுகளாக வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது, இந்தியாவில் முதல் நிதி அமைச்சராக இருந்த ஜேம்ஸ் வில்சன் 1860–ம்ஆண்டு ஜூலை மாதம் 24–ந்தேதி வருமான வரி முறையை கொண்டுவந்தார். வருமான வரி அறிமுகமான முதல்ஆண்டில் 30 லட்சம் ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைத்தது. தற்போது இந்தியாவில் தனிநபர் வருமான வரி குறைவுதான். இந்தியாவில் அதிகபட்ச வரி 30 சதவீதமும், மேல்வரியாக 4 சதவீதமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 39.60 சதவீதமாக வசூலிக்கப்படுகிறது. என்னதான் முயற்சித்தாலும் மாதச்சம்பளம் பெறுபவர்களைத்தவிர வருமானம் ஈட்டும் மற்றவர்கள் அனைவரையும் வருமான வரி வளையத்துக்குள் முழுமையாக கொண்டுவர முடிய வில்லை. வருமான வரி என்றால் ஒரு அச்சஉணர்வு ஏற்படாதவகையில், அனைத்து முறைகளையும் எளிமையாக்கவேண்டும். இல்லையென்றால் 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. பல கூட்டங்களில் கூறியதுபோல, வருமான வரியை ஒழித்துவிட்டு, ‘‘வங்கி பரிமாற்ற வரி’’ கொண்டுவந்தால் அரசாங்கத்துக்கும் பெருமளவில் வருமானம் கிடைக்கும். வரி ஏய்ப்பும் செய்யமுடியாது. 

மேலும் செய்திகள்