விவசாயிகளின் வருமானம் இருமடங்காவது எப்போது?

இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டு, அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 5.8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துவிட்டது.

Update: 2019-10-16 22:30 GMT
ந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டு, அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 5.8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துவிட்டது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாதவகையில் ஜி.டி.பி. குறைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக மத்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. தொழில் நிறுவனங்களில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டால்தான் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்ற நோக்கத்தில், உடனடியாக நிறுவனங்களின் வரி குறைக்கப்பட்டது. இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த தீபாவளி பரிசால், அரசுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. வளர்ச்சியையும், முதலீட்டையும் அதிகரிக்க தொடர்ந்து அடுத்தாற்போல் பல்வேறு ஊக்கச்சலுகைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நிச்சயமாக தொழில் வளர்ச்சி தேவைதான். ஆனால் தொழிலும், விவசாயமும் ஒன்றுபோல் வளர்ச்சியை கண்டால்தான் பொருளாதார மேம்பாடு அதிகமாக இருக்கும். அந்தவகையில், தொழில் வளர்ச்சிக்கு அறிவிக்கப்பட்டதுபோல, ஊக்கச்சலுகைகள் விவசாயத்துக்கு எப்போது அறிவிக்கப்படும்? என்ற ஏக்கம் விவசாயிகளிடம் இருக்கிறது. 

3 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளின் வருமானம் 2022–23–க்குள் இருமடங்காகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்த்துவதற்கான சலுகை மழை எப்போது பெய்யப்போகிறது? என்று விவசாயிகள் அரசாங்கத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நிலையில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து விலை என்று எல்லாமே உயர்ந்து கொண்டிருக்கிறது. நீர்ப்பாசனத்துக்கு தேவையான தண்ணீர் உரியநேரத்தில் கிடைக்காதது பெரும் குறையாக இருக்கிறது. பெரும்பாலான பருப்பு வகைகளான மைசூரு துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, துவரம்பருப்பு மற்றும் நெல், கம்பு, சோளம், நிலக்கடலை, சோயாபீன் போன்ற தானியங்களின் விலையும் குறைந்துவிட்டது. விவசாயிகளின் உற்பத்தி செலவுக்கு விற்பனை விலை கட்டுப்படியாகவில்லை. 

அதேநேரம் இடுபொருட்களின் விலையெல்லாம் உயர்ந்துவிட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு டி.ஏ.பி. உரம் 50 கிலோவுக்கு ரூ.1,100 ஆக இருந்தது. தற்போது ரூ.1,450 ஆகிவிட்டது. இடுபொருட்கள் விலை ரூ.700 ஆக இருந்தது, இப்போது ரூ.950 ஆகிவிட்டது. காம்ப்ளக்ஸ் விலை 889 ரூபாயாக இருந்தது, இப்போது ரூ.1,050 ஆகிவிட்டது. பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை 10 சதவீதம் உயர்ந்துவிட்டது. விவசாய கூலியும் உயர்ந்துவிட்டது. இப்படி உற்பத்திச்செலவு அதிகமான நிலையில், விவசாயிகளின் வருமானம் வெகுவாக குறைந்துவிட்டது. 

பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்தபடி, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயர வேண்டுமென்றால், உற்பத்திச்செலவை குறைத்து, விளைபொருட்கள் விலையை அதிகரித்து, அதற்கு ஏற்றவகையில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விவசாய மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுத்தால்தான் பிரதமர் வாக்குறுதி அளித்தபடி, விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்ந்துவிட்டது என்ற பெருமையை மத்திய அரசாங்கம் பெறமுடியும். ஏற்கனவே விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒருகுழு போடப்பட்டுள்ளது. அந்த குழுவின் பணிகள் இன்னும் அதிக வேகம் எடுக்கவேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகள்