வீடுகளுக்கு திரும்பி செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

தினத்தந்தியில் நேற்று முன்தினம் தேசத்தின் மனச்சாட்சியை உருக்கும் துயரம், ரெயில் நிலையத்தில் பசியால் இறந்த தாயை எழுப்பும் குழந்தை என்ற செய்தி, படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது. இதைப்பார்க்கும்போது, கல் மனம் கொண்டவர்களையும் கண்ணீர்விட வைத்தது.

Update: 2020-05-29 23:38 GMT
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு சென்ற தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயிலில் கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண், ரெயில் நிலையத்திலேயே இறந்து கிடக்கிறார். தனது தாய் இறந்து கிடப்பதை புரிந்துகொள்ள முடியாமல், அந்த குழந்தை அவர் மீது போர்த்திய போர்வையை விலக்கி எழுப்ப முயற்சித்த அந்த காட்சி நெஞ்சை உலுக்கியது.

ரெயிலில் வரும்போது சரியாக உணவு வழங்கப்படாததால், பசியில் அந்த தாய் இறந்துவிட்டதாக பீகார் முன்னாள் முதல்மந்திரி லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவின் உதவியாளர் சஞ்சய் யாதவ், டுவிட்டரில் இந்த வீடியோ காட்சியையும், சில வார்த்தைகளையும் பதிவு செய்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை பார்க்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையில்லாததால் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்தனர். பலர் ரெயில், பஸ் போக்குவரத்து இல்லாததால், பல நூற்றுக்கணக்கான மைல் தூரம் கால்நடையாகவே நடந்து சென்றனர். மேலும் பலர் சைக்கிளில் செல்ல தொடங்கினர்.

இந்தநிலையில், மத்திய அரசாங்கம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சிரமிக் சிறப்பு ரெயில் என்ற ரெயில்களை இயக்கியது. இந்த ரெயில்களுக்காக காத்திருக்கும்போதும், ரெயிலில் சில நாட்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய நிலையிலும் சரியாக உணவு வழங்கப்படவில்லை, தண்ணீர் வழங்கப்படவில்லை என்று புகார்கள் கூறப்படுகின்றன.

சில மாநிலங்களில் இந்த சிறப்பு ரெயில்களில் பயணம் செய்த சிலர் இறந்திருக்கிறார்கள். சில இடங்களில் இந்த ரெயில்கள் தேவையில்லாமல் நீண்டநேரம் நிறுத்திவைக்கப்படுகிறது, மாற்றுப்பாதையில் செல்லவைக்கப்படுகிறது என்பது போன்ற பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக விடப்படும் ரெயில்களில், அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது. இந்த ரெயிலுக்காக அவர்கள் காத்திருக்கும்போது அந்த மாநில அரசுகள் தங்குமிடம், உணவு, தண்ணீர் வசதி அளிக்க வேண்டும். ரெயிலில் பயணம் செய்யும்போது ரெயில்வே நிர்வாகம் இந்த வசதிகளை அளிக்க வேண்டும்.

பஸ்சில் சென்றால், எந்த மாநிலத்தில் இருந்து தொடங்குகிறதோ, அந்த மாநில அரசு அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் கடமையை செய்ய வேண்டும் என்பது போன்ற பல உத்தரவுகளை 11 பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ரெயில்வே நிர்வாகம், சிறப்பு ரெயில்களுக்கான கால அட்டவணையை முறையாக வெளியிட்டு, அதன்படி இயக்க வேண்டும். மாநில அரசுகளும், ரெயில்வே நிர்வாகமும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை அப்படியே பின்பற்ற வேண்டும்.

இந்த நிலையில், ரெயில்வே நிர்வாகம் அவசியம் இல்லாமல், ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய், புற்றுநோய், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைந்தவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர் இத்தகைய சிறப்பு ரெயில்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ள வேண்டுகோள் தேவையற்றது.

இவர்கள் எல்லாம் தங்கள் சொந்த மாநிலத்தில் உள்ள வீடுகளில் அதிக பாதுகாப்புடன் இருப்பார்களே ஒழிய, வேலைக்கு செல்லும் மாநிலங்களில் அதே அளவு வசதிகளோடு இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. மொத்தத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக எல்லா வசதிகளுடனும் அவரவர் சொந்த இடங்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பது மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

மேலும் செய்திகள்