அறிவுக்கோவிலான நூலகத்தையும் திறந்து விடலாமே!

அரசாங்கத்தின் வருமானம் பெரும் வீழ்ச்சியை கண்டு கொண்டிருக்கும் நேரத்தில், வருமானத்தின் ஆதாரமான டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டன.

Update: 2020-08-26 21:30 GMT
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டவிழ்த்த காளைபோல துள்ளிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், கொரோனா குறைந்தபாடில்லை. 5 மாதங்கள் ஆகிவிட்டன, இப்படியே கொரோனா.. கொரோனா.. என்று சொல்லிக்கொண்டு இருந்தோம் என்றால், இயல்பு வாழ்க்கை என்ன ஆவது? மக்களின் வாழ்வாதாரம் என்ன ஆவது? என்ற கேள்விகள் மக்களின் மனதில் எழத்தொடங்கிவிட்டன. அதனால்தான் அரசு பல தளர்வுகளை கொண்டுவந்திருக்கிறது.

அரசாங்கத்தின் வருமானம் பெரும் வீழ்ச்சியை கண்டு கொண்டிருக்கும் நேரத்தில், வருமானத்தின் ஆதாரமான டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்கள் எண்ணிக்கையோடு இயங்குகின்றன. வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டுவிட்டன. சிறிய வழிபாட்டுத் தலங்களும் சில கட்டுப்பாடுகளோடு திறக்கப்பட்டுவிட்டன. ‘நீட்’ தேர்வுகூட செப்டம்பர் 13-ந்தேதி நடக்கும் என்று உறுதிபட அறிவிக்கப்பட்டுவிட்டது. இறைவழிபாட்டுக்கான ஆலயங்களை திறக்கும்போது, அறிவுக் கோவிலான நூலகத்தை மட்டும் ஏன் இன்னும் திறக்கவில்லை? என்ற கேள்வி மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே எழுகிறது.

‘ஹாரிபாட்டர்’ கதைகளை புத்தகங்களாக எழுதியுள்ள எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங், “சந்தேகம் ஏற்படும் நேரத்தில் நூலகத்திற்கு செல்” என்பார். மற்றொரு முதுமொழி, நான் சொர்க்கத்தைப் பற்றி கற்பனை செய்யும்போதெல்லாம், அது ஒரு நூலகம் போலத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன் என்பதாகும். அப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 4,600 அரசு நூலகங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதில், 32 மாவட்ட நூலகங்கள், 1,926 கிளை நூலகங்கள், 745 பகுதிநேர நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்களும் அடங்கும்.

மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மறைந்த அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவோடு அவர் நினைவை போற்றும் வகையில், மறைந்த முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி ரூ.172 கோடி செலவில் சென்னை கோட்டூர்புரத்தில் கட்டிய, ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகமும், ஆங்கிலேயர் காலத்திலேயே தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகமும் மூடப்பட்டு கிடப்பதுதான்.

இந்த நூலகங்களில் எல்லாம் 8 கோடியே 79 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. 74 லட்சத்து 29 ஆயிரம் வாசகர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். பொதுவாக தலைவர்கள் எல்லாம் வீட்டிலேயே நூலகத்தை வைத்துக்கொள்வார்கள். அந்தவகையில், மறைந்த முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆயிரக்கணக்கான நூல்களை வீட்டில் வைத்திருந்தனர். அதேபோலத்தான், தமிழ்நாட்டிலும் பலர் நூலகங்களை அறிவுப் பொக்கிஷங்களாக கருதி, தினமும் அங்குபோய் தங்கள் அறிவைப் பெருக்கிக்கொள்ள நூல்களை படிப்பது வழக்கம். வீட்டில் பத்திரிகைகள் வாங்குவதற்கோ, வாராந்திர, மாதாந்திர இதழ்கள் வாங்குவதற்கோ, புத்தகங்கள் வாங்குவதற்கோ வசதியில்லாத இளைஞர்கள் எல்லாம் நூலகத்திற்கு போய்த்தான் தங்கள் அறிவை விசாலமாக்கிக் கொள்வார்கள். போட்டித் தேர்வுகளை எழுதத் தயாராகும் இளைஞர்களுக்கு நூலகங்கள்தான் சிறந்த வழிகாட்டி. தற்போது, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் சிந்தனையை நேர்கோட்டில் அழைத்து செல்லும் சிறந்த வாகனம் நூலகம்தான்.

இந்தநிலையில், மூடப்பட்ட நூலகங்களை எல்லாம் பராமரிக்கவேண்டும். இப்போதுள்ள நூலகங்களில் வெறும் புத்தகங்கள் மட்டுமல்லாமல், இணையதள வசதிகளும் ஏற்படுத்தப்படவேண்டும். கிராமத்திலுள்ள ஒரு இளைஞன் இணையதளம் மூலமாக தன் அறிவை வளர்த்துக்கொள்வதற்கும், இப்போதெல்லாம் ஆன்லைன் மூலமே வேலைக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டிய சூழ்நிலையில், நூலகத்தில் அந்த வசதிகள் இருக்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளும் வகையிலும், நூலகங்கள் மேம்படுத்தப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நூலகங்கள் உடனடியாக திறக்கப்படவேண்டும் என்பதுதான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நூலகங்களை பயன்படுத்துபவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இயல்பாகவே நூலகங்களில் பெரிய அளவில் கூட்டம் இருக்காது. இருந்தாலும் சமூக இடைவெளியைப் பின்பற்றி பயன்படுத்தவேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உடனடியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்