இலங்கை தமிழர்களுக்கு இனிக்கும் செய்திகள்!

‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்று நீண்ட நெடுங்காலமாக புகழாரம் சூட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

Update: 2021-09-02 19:54 GMT
‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்று நீண்ட நெடுங்காலமாக புகழாரம் சூட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் 1983-ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட இன கலவரத்துக்குப்பிறகு இன்று வரை கடல் கடந்து தாய் தமிழ்நாட்டை நாடி வந்துக்கொண்டிருக்கிறார்கள். தனக்கே உரித்த பண்பு, வரவேற்கும் தன்மை அடிப்படையில் தமிழகமும் அவர்களை வரவேற்று அரவணைத்து, காப்பாற்றி வருகிறது. அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி வருகிறது. 1983-ம் ஆண்டு முதலாவதாக இலங்கையில் இருந்து அவர்கள் அகதிகளாக வரத்தொடங்கிய காலத்தில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். அவர் தொடங்கி, அடுத்து முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி இப்போது மு.க.ஸ்டாலின் என்று எல்லோருமே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வந்திருக்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களிலும் சட்டசபையில் இலங்கை தமிழர்களுக்காக அறிவித்த அறிவிப்புகள், ‘உங்களுக்கு நான் இருக்கிறேன். மகிழ்வோடு தமிழ்நாட்டில் வாழுங்கள்’ என்று சொல்லும் வகையில் இருக்கிறது.

கடந்த சனிக்கிழமையன்று சட்டசபையில் ஒரு உறுப்பினர் இலங்கை அகதிகள் முகாம் என்று பேசிய நேரத்தில், மு.க.ஸ்டாலின் எழுந்து இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல. அவர்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். அந்த உணர்வோடு இலங்கை அகதிகள் முகாம், இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என்று நல்ல மனிதாபிமானமிக்க அன்புகெழுமிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்றுவரை தமிழ்நாட்டுக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்திருக்கிறார்கள். இதில், 18 ஆயிரத்து 944 குடும்பங்களை சார்ந்த 58 ஆயிரத்து 822 பேர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 2 சிறப்பு முகாம்கள் உள்பட 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மறுவாழ்வு முகாமில் தங்காமல் 13 ஆயிரத்து 540 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 87 பேர் அருகில் உள்ள காவல்நிலையங்களில் பதிவுசெய்து, வெளியே தாங்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். இலங்கை தமிழர்கள் நலன்களை பேணிட மு.க.ஸ்டாலின் ரூ.317 கோடியே 40 லட்சம் செலவில் வீடு கட்டுதல், இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கல்வி, வேலைவாய்ப்பினை உறுதி செய்திடல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அவர்களின் வாழ்வாதார பணிக்கொடை, கல்வித் தொகை உள்பட பல்வேறு உதவிகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்கு குடியுரிமை வழங்குதல், இலங்கை திரும்ப விரும்புபவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகால தீர்வை கண்டறிய ஒரு ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இலங்கை தமிழர்களை பொறுத்தமட்டில் அவர்கள் வந்து, நீண்ட நெடுங்காலமாகிவிட்டது. இப்போது அங்கு இன கலவரம் இல்லை. எனவே என்னதான் சொந்தக்காரர்கள் வீட்டில் நன்றாக உபசரித்தாலும், அன்போடு அவர்களை பராமரித்தாலும், தங்கள் வீட்டுக்கு போகவேண்டும் என்ற ஏக்கம் விருந்தினருக்கு இருப்பதுபோல, இவர்களில் சிலர் தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல நிச்சயம் விரும்புவார்கள்.

அப்படி இலங்கை திரும்ப விரும்பும் தமிழர்களின் பட்டியலை கணக்கிட்டு, இலங்கை அரசோடு பேசி அவர்களுக்கு அங்கு நல்வாழ்வு கிடைப்பதற்கான ஏற்பாட்டையும் தமிழக அரசு, மத்தியஅரசு மூலம் செய்யவேண்டும். மீதமுள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க அரசியல் சட்டம் மற்றும் குடியுரிமை சட்டம் அனுமதிக்காததால், இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். இந்திய குடியுரிமை வழங்கினால் அகதிகள் முகாமில் தங்கவேண்டாம். அங்கு வாழவேண்டிய அவசியம் இருக்காது. அரசு பணிகள் உள்பட பல வேலைகளில் சேரமுடியும். தொழில் தொடங்கமுடியும். வர்த்தகம் செய்யமுடியும்.

மேலும் செய்திகள்