பத்திர பதிவு நிகழ்வை வீடியோவாக பெறும் வசதி

தமிழக அளவில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 25 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

Update: 2019-02-02 11:41 GMT
ஆவண பதிவின்போது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை தடுக்கும் நோக்கில் கடந்த 2013-ம் ஆண்டில் பதிவு அலுவலகத்தில் ஆவணம் தொடர்பாக விற்பவர் மற்றும் வாங்குபவர்களை புகைப்படம் எடுத்தல், பதிவு நிகழ்வுகளை ‘சிடி’யாக அளித்தல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில் மீண்டும் இந்த திட்டத்தை தொடங்கி, பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மற்றும் வெளி நிகழ்வுகளையும் கண்காணிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 575 பத்திரப் பதிவு அலுவலகங்களின் நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில் 1700 கேமராக்கள் பொருத்தப்பட்டு ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

அந்த திட்டத்தின்படி ஒரு சார்பதிவு அலுவலகத்தில் 2 கேமராக்கள் பொருத்தப்படும். பதிவு சார்பான நிகழ்வுகளை கண்காணிக்க ஒன்றும், அலுவலகத்திற்கு வெளியிலிருந்து உள்ளே வருபவர்கள் மற்றும் இதர வெளி நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில் இன்னொன்றும் இருக்கும். அவற்றின் மூலம், பதிவு அலுவலக நிகழ்வுகளை பதிவுத்துறை தலைவர் மற்றும் துணைத்தலைவர் அலுவலகங்களில் இருந்து கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பதிவு நிகழ்வுகளை குறிப்பிட்ட கட்டணத்தில் ‘சிடி’ மூலம் பதிவு செய்து ஆவணதாரர்களுக்கு அளிக்கப்படும்.

சென்னையில் உள்ள பதிவு அலுவலகங்களில் மட்டும் சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட நிலப்பதிவு ஆவணங்கள் சரியான தகவல்களை அளிக்காதது மற்றும் போலியான தாய்ப்பத்திரம் போன்ற காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டதாக அறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை புறநகர் பகுதி சார்பதிவகங்களில் மேற்கண்ட போலியான தாய்ப்பத்திரம் தவிரவும், முறையற்ற பவர் பத்திரங்களும் கண்டறியப்பட்டு அவை சம்பந்தமான ஆவண பதிவுகள் நிராகரிப்பு செய்யப்பட்ட தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. மேற்கண்ட சிக்கல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பதிவுத்துறையில் பல்வேறு தொழில்நுட்ப நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்