தலாய்லாமாவுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் சந்திப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், தர்மசாலாவில் திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை நேற்று சந்தித்து ஆசி பெற்றனர்.

Update: 2017-03-24 23:30 GMT
எதிர்பார்ப்பு நிறைந்த டெஸ்ட் போட்டிக்கு முந்தைய நாள்  ரிலாக்சாக தூங்குவது எப்படி என்று அவரிடம் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் அறிவுரை கேட்டார்.

இது குறித்து ஸ்டீவன் சுமித் நிருபர்களிடம் கூறுகையில், 'நிம்மதியான உறக்கத்துக்கு உதவும்படி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் என்னை ஆசீர்வதித்தார். திபெத் கலாசாரத்தின்படி நானும், அவரும் ஒருவரையருவர் மூக்கால் உரசிக்கொண்டோம். அவர் எனக்கு தன் ஆசிகளை வழங்கினார். இது எனக்கு அடுத்த 5 நாட்களும் நிம்மதியான தூக்கத்தை தரும் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார்.

மேலும் சுமித், 'தலாய்லாமா ஒவ்வொரு மனிதரையும் நேசிப்பவர். கருணை மிக்கவர். அவரைப்போன்ற ஒருவரை நேரில் சந்தித்து ஆசி பெறுவது நாங்கள் செய்த அதிர்ஷ்டம். எங்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அவரிடம் இருந்து நாங்கள் ஏதாவது பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்றால், கடினமான கிரிக்கெட்டில் சில நேரம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம். அது தடுக்கப்படலாம். ஏனெனில் கடைசியில் இது வெறும் விளையாட்டு என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டி உள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்