டி20 உலகக்கோப்பை: துணை கேப்டனாக ஹர்திக் தேர்வு செய்யப்பட்டது ஏன்..? - அகர்கர் விளக்கம்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-05-02 14:09 GMT

மும்பை,

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் அவருடைய தலைமையிலான மும்பை அணி 7 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் தவித்து வருகிறது. எனவே பாண்ட்யாவை கழற்றி விடுமாறு சில முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்த நிலையில் தேர்வுக் குழு அவரை துணைக் கேப்டனாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிகரான மாற்று வீரர் இல்லை என்பதாலேயே அவரைத் தேர்வு செய்துள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "துணை கேப்டன்ஷிப் பதவியை பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இதுவரை அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார். நம்முடைய முதல் போட்டிக்கு முன்பாக நமக்கு ஒரு மாதம் இடைவெளி இருக்கிறது. எனவே பிட்டாக இருக்கும் வரை பாண்ட்யா செய்யக்கூடிய வேலையை செய்வதற்கு மாற்று வீரர்கள் இல்லை. காயத்திற்கு பின் அவர் நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளார். எனவே பவுலிங் உட்பட தன்னுடைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்