2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இலங்கையை ஊதித்தள்ளியது இந்தியா

இந்தூரில் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அபார சதத்தால் இலங்கையை ஊதித்தள்ளிய இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Update: 2017-12-22 22:30 GMT
இந்தூர்,

இந்தூரில் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அபார சதத்தால் இலங்கையை ஊதித்தள்ளிய இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் மாற்றம் இல்லை. இலங்கை அணியில் இரு மாற்றமாக விஷ்வா பெர்னாண்டோ, ஷனகா நீக்கப்பட்டு சமரவிக்ரமா, ஆல்-ரவுண்டர் சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டனர்.

டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் திசரா பெரேரா, இந்த முறையும் பந்து வீச்சையே தேர்வு செய்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், எல்லைக்கோடு தூரம் குறைவு என்பதால் இங்கு ரன்மழை பொழிய முடியும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அது போலவே ஆட்டத்தின் போக்கு அமைந்தது.

ரோகித் சதம்

ராகுலும், ரோகித் சர்மாவும், முதல் ஓவரில் இருந்தே அதிரடியில் குதித்தனர். ராகுல் 6 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை சமரவிக்ரமா வீணடித்தார். இதன் பிறகு இருவரும் இலங்கை பந்து வீச்சை பின்னியெடுத்தனர். குறிப்பாக ரோகித் சர்மாவின் பேட்டில் பட்ட பந்துகள் மைதானத்தின் நாலாபுறமும் தெறித்து ஓடின. குணரத்னேவின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர், 2 பவுண்டரி ஓடவிட்ட ரோகித் சர்மா, எதிரணி கேப்டன் திசரா பெரேராவின் ஓவரில் தொடர்ந்து 4 பந்துகளை சிக்சருக்கு அனுப்பி வைத்து மிரள வைத்தார். இது நேரடி ஆட்டமா? அல்லது ஹைலெட்சா என்று சந்தேகம் வரும் அளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்வேட்டையாடினர்.

வாணவேடிக்கை காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்திய ரோகித் சர்மா 35 பந்துகளில் சதத்தை எட்டி சாதனை படைத்தார். முதல் 50 ரன்களை 23 பந்துகளில் எடுத்த அவர் அடுத்த 50 ரன்களை 12 பந்தில் கொண்டு வந்து மலைக்க வைத்தார்.

அணியின் ஸ்கோர் 165 ரன்களாக உயர்ந்த போது (12.4 ஓவர்) ரோகித் சர்மா 118 ரன்களில் (43 பந்து, 12 பவுண்டரி, 10 சிக்சர்) கேட்ச் ஆனார். ஒரு விக்கெட்டுக்கு இந்திய ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு கடந்த மாதம் டெல்லியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா- ஷிகர் தவான் இணை தொடக்க விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை ரோகித்-ராகுல் கூட்டணி முறியடித்தது.

ராகுல் 89 ரன்

அடுத்து விக்கெட் கீப்பர் டோனி களம் புகுந்தார். மறுமுனையில் ராகுலும், சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கித் தள்ளினார். அவரது ஒரு இமாலய சிக்சர் 101 மீட்டர் தூரத்திற்கு பறந்த போது, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் ஸ்டேடியமே அதிர்ந்தது. சதத்தை நெருங்கிய ராகுல் 89 ரன்களில் (49 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்) நுவான் பிரதீப்பின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த ஹர்திக்பாண்ட்யா 10 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் ஏதுமின்றியும், டோனி 28 ரன்களிலும் (21 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தனர். கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினால், உலக சாதனை ஸ்கோரை அடையலாம் என்ற நிலையில், அந்த பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

இந்தியா 260 ரன்கள்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. 3 மற்றும் 16-வது ஓவர்களை தவிர மற்ற அனைத்து ஓவர்களிலும் பந்து குறைந்தது ஒரு முறையாவது எல்லைக்கோட்டை தொட்டிருந்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் நிரோஷன் டிக்வெல்லா 25 ரன்களில் வெளியேறினாலும், அதன் பிறகு கைகோர்த்த உபுல் தரங்காவும், குசல் பெரேராவும் இந்திய பந்து வீச்சை சிதறடித்தனர். குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹலின் ஓவர்களில் சர்வசாதாரணமாக பந்து சிக்சரை நோக்கி பயணித்தன. 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி இலக்கை நெருங்கும் போல் போன்றியது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது.

ரன்களை வாரி வழங்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப், சாஹல் ஆகியோருக்கு விக்கெட் கீப்பர் டோனி அவ்வப்போது ஆலோசனை வழங்கி, ஊக்கமூட்டினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. தரங்கா 47 ரன்னிலும் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), குசல் பெரேரா 77 ரன்களிலும் (37 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) சுழல் வலையில் சிக்கினர். அதன் பிறகு வந்த வீரர்களில் ஒருவர் கூட இரட்டை இலக்கை தொடவில்லை. காயம் காரணமாக மேத்யூஸ் பேட் செய்ய வரவில்லை.

இலங்கை தோல்வி


முடிவில் இலங்கை அணி 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் வெற்றி கண்டிருந்ததால் 3 போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

மேலும் செய்திகள்