20 ஓவர் கிரிக்கெட் ரிஷாப் பான்ட் அதிவேக சதம் அடித்து அபாரம்

முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மண்டலங்கள் வாரியாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-01-15 22:45 GMT
புதுடெல்லி,

வடக்கு மண்டல அணிகளுக்கான போட்டியில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் டெல்லி-இமாச்சலபிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இமாச்சலபிரதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 38 பந்துகளில் 8 பவுண்டரி, 12 சிக்சருடன் 116 ரன்னும், கம்பீர் 33 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 30 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ரிஷாப் பான்ட் 32 பந்துகளில் சதத்தை கடந்தார். இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்) 30 பந்துகளில் சதம் அடித்ததே இந்த வகையில் சாதனையாக உள்ளது. 20 ஓவர் போட்டியில் இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் (2017-ம் ஆண்டில் இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில்) அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ரிஷாப் பான்ட் முந்தினார்.

மேலும் செய்திகள்