விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கர்நாடக அணி

முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான கர்நாடக அணி, மராட்டியத்தை எதிர்கொண்டது.

Update: 2018-02-24 22:15 GMT
புதுடெல்லி,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில், டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான கர்நாடக அணி, மராட்டியத்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த மராட்டிய அணி 44.3 ஓவர்களில் 160 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. தொடர்ந்து ஆடிய கர்நாடகம் 30.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 81 ரன்களும் (86 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் கருண்நாயர் 70 ரன்களும் (90 பந்து, 10 பவுண்டரி) எடுத்தனர். மயங்க் அகர்வால் இந்த தொடரில் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 3 சதம், 3 அரைசதத்துடன் 633 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் ஒரு சீசனில் விஜய் ஹசாரே போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை மயங்க் அகர்வால் படைத்தார். இதே மைதானத்தில் இன்று நடக்கும் 2-வது அரைஇறுதியில் ஆந்திரா-சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்