இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தகராறு: வங்காளதேச கேப்டன் அல்-ஹசன், நுருல் ஹசனுக்கு அபராதம்

இலங்கைக்கு எதிரான கடைசி லீக்கில் தகராறில் ஈடுபட்ட வங்காளதேச வீரர்கள் கேப்டன் ஷகிப் அல்-ஹசன், நுருல் ஹசன் ஆகியோருக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது.

Update: 2018-03-17 22:08 GMT
கொழும்பு,

இலங்கைக்கு எதிரான கடைசி லீக்கில் தகராறில் ஈடுபட்ட வங்காளதேச வீரர்கள் கேப்டன் ஷகிப் அல்-ஹசன், நுருல் ஹசன் ஆகியோருக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது.

பவுன்சரால் வெடித்த சலசலப்பு

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை பதம் பார்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் இலங்கை நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் உதனா வீசினார்.

முதல் பந்தை பவுன்சராக வீசிய உதனா, அடுத்த பந்தையும் தோள்பட்டைக்கு மேலாக எகிறும் வகையில் பவுன்சராக வீசினார். 20 ஓவர் போட்டியில் ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டுமே வீச அனுமதி உண்டு. அதே ஓவரில் மறுபடியும் பவுன்சர் வீசினால், நோ-பாலாக அறிவிக்கப்பட்டு ‘பிரிஹிட்’ வழங்கப்படும். ஆனால் நடுவர் அதை செய்யவில்லை. களத்தில் நின்ற வங்காளதேச பேட்ஸ்மேன் மக்முதுல்லா நோ-பால் வழங்கும்படி நடுவரிடம் வாதிட்டார். இதற்கிடையே தண்ணீர் பாட்டில் எடுத்து வந்த வங்காளதேச மாற்று ஆட்டக்காரர் நுருல் ஹசன், இலங்கை கேப்டன் திசரா பெரேராவை வம்புக்கு இழுத்தார். அவரை நோக்கி சரமாரியாக வசைபொழிந்தார். பெரேராவும் அவரை திட்டினார். பிறகு மற்ற வீரர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.

ஷகிப் அல்-ஹசன் கொதிப்பு


வெளியே உட்கார்ந்து இதை கவனித்துக் கொண்டிருந்த வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் கடும் கோபத்திற்கு உள்ளானார். மாற்று நடுவரிடம் வாக்குவாதம் செய்த அவர் எல்லைக்கோடு அருகே வந்து, பெவிலியன் திரும்பும்படி தங்களது பேட்ஸ்மேன்களை நோக்கி சைகை காட்டினார். இரு அணி வீரர்களும் உணர்ச்சி பிழம்பாய் வரிந்துகட்டி நிற்க, களத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது. இதனால் ஆட்டமும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

நடுவர்கள் சமாதானப்படுத்திய பிறகு ஆட்டம் தொடர்ந்து நடந்தது. அடுத்த மூன்று பந்துகளில் 4, 2, 6 வீதம் ரன்கள் விரட்டிய மக்முதுல்லா (43 ரன், நாட்-அவுட்) ஒரு பந்தை மீதம் வைத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

வெற்றி பெற்றதும் மைதானத்திற்குள் ஓடி வந்த வங்காளதேச அணியினர், தங்களது புதிய ஸ்டைலான பாம்பு நடனம் ஆடி கொண்டாடினர். இந்த பரபரப்புக்கு மத்தியில் வங்காளதேச வீரர்களின் ஓய்வறையின் கண்ணாடி கதவு அடித்து நொறுக்கப்பட்டது.

ஐ.சி.சி. நடவடிக்கை

இறுதி கட்டத்தில் எதிர்பாராமல் நடந்த குழப்பங்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் கிறிஸ் பிராட் நேற்று விசாரணை நடத்தினார். நடத்தை விதிமுறையை மீறியதாக வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன், மாற்று ஆட்டக்காரர் நுருல் ஹசன் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி தலா ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது.

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்த மாதிரியான போட்டியிலும் வீரர்கள் இது போன்று நடந்து கொள்வதை யாரும் விரும்புவதில்லை. இந்த போட்டி வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் உணர்ச்சிகரமான கட்டத்தில் இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஷகிப் அல்-ஹசன், நுருல் ஹசன் ஆகியோர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களும் தவறை ஒப்புக் கொண்டனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணாடியை உடைத்தது யார்?


இதற்கிடையே, ஓய்வறையின் கண்ணாடி கதவை வங்காளதேச வீரர் ஒருவரே உடைத்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதற்குரிய இழப்பீட்டு தொகையை இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்க வங்காளதேசம் அணி நிர்வாகம் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்