‘எனது சாதனையை சேவாக் முறியடித்தபோது...’ -விவரிக்கிறார் வி.வி.எஸ். லட்சுமண்

இந்திய கிரிக்கெட் அணியின் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயண தருணத்தில் அதிகம் நினைவுகூரப்படுபவர், வி.வி.எஸ். லட்சுமண்.

Update: 2019-01-05 12:14 GMT
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அப்படி ஆதிக்கம் செலுத்தியவர், லட்சுமண். ஆஸ்திரேலியா உடனான தனது 29 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்களுடன் 2434 ரன்கள் குவித்து அசத்தியவர் இவர். அதில், கொல்கத்தா ஈடன் கார்டனில் 281 ரன்கள் சேர்த்த முத்திரை ஆட்டமும் அடக்கம்.

பேட்டால் மட்டுமே அதிகம் பேச விரும்பிய லட்சுமண், முதல்முறையாக ‘281 அண்ட் பியாண்ட்’ என்ற தனது சுயசரிதையில் மனம் திறந்திருக்கிறார்.

அது உள்ளிட்ட விஷயங்கள் குறித்த லட்சுமணின் பேட்டி...

உங்கள் சுயசரிதையில் இயல்பாக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்களா?

முழுக்க முழுக்க இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடிய நாட்களில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதில்லை. இப்போது நான் நிறைய ஊக்க உரைகள் ஆற்றுகிறேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு கோவாவில் அப்படி ஓர் உரை ஆற்றியபோது, அது தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், தனது மகனுக்கும் பேரனுக்கும் எனது பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஒரு முதியவர் கூறினார். அத்துடன், நான் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அதுதான் இந்த சுயசரிதைக்கான தூண்டுகோல். அதைத் தொடர்ந்து, நான் பல பிரபலமான மனிதர்களின் சுயசரிதைகளை வாசித்தேன். மகாத்மா காந்தி, விவேகானந்தர், ஆந்திரே அகாசி பற்றிய புத்தகங்களைப் படித்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சை பிளந்துகட்டியவர் நீங்கள். அவர்களுக்கு எதிராக விளையாடுவது உங்களுக்குப் பிடிக்குமா?

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். 1994-ல் இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணி சார்பில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஆடியபோதும் அதிக ரன் குவித்தவன் நான்தான். அவர்களின் தாக்குதல் பாணியும், போட்டி இயல்பும் எனக்குப் பிடிக்கும். எங்களுடைய தலைமுறையில், மிகச் சிறந்த பந்துவீச்சு ஆஸ்திரேலியாவுடையது. அவர்களால் அப்போது உலகின் எந்த மூலையிலும் சிறப்பாக விளையாட முடியும். ஒருபோதும் பின்வாங்கிவிடாத அவர்களின் இயல்புதான் எனது சிறந்த திறமையை வெளிக்கொண்டு வந்தது. அத்துடன், அந்நாள் இந்திய அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சரிக்குச் சரியாய் சவால் விட்டு நின்றது, அவர்களுடன் மோதும்போதெல்லாம் தமது ஆட்டத்தரத்தை உயர்த்திக் கொண்டது.

‘போட்டி’ இருந்திருக்கலாம்... ஆனால் நீங்கள் எப்போதும் ஒரு ‘நல்ல பையன்’ இமேஜுடன் இருந்தீர்களே?

நான் எப்போதும் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதே இல்லை. தீவிரமாய் போட்டி போடுகிறோம், வென்றே தீர வேண்டும் என்று எண்ணுகிறோம் என்பதற்காக நாம் ஆர்ப்பாட்டமாக நடந்துகொள்ளத் தேவையில்லை. தேவையான நேரத்தில் நாம் மனஉறுதியைக் காட்டினாலே போதும். பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தையால் சீண்டுவார்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் என் மீது அதிகம் வார்த்தைகளை ஏவியதில்லை. அது எனக்குத் தொந்தரவாக இருந்ததில்லை. யாரை, எப்படி வார்த்தையால் சீண்டுகிறோம் என்பது முக்கியம். நான் பார்த்த வரையில் ஜாகீர் கானும் ஹர்பஜன் சிங்கும் அதில் திறமைசாலிகள். அதன் மூலம் அவர்கள் நம்பமுடியாத பலன்களை ஈட்டினார்கள்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 281 இருந்தது. 2004-ல் முல்தான் டெஸ்டில் தான் விளாசிய 309 ரன்கள் மூலம் அதை முறியடித்த சேவாக், உங்களிடம் ‘சாரி’ சொன்னாரே?

அவர் சாதனை புரிந்ததை அறிந்து நான் சந்தோஷமே பட்டேன். ஒரு வீரராகவும், மனிதராகவும் ‘வீரு’ தன்னம்பிக்கையானவர், தனித்தன்மையானவர். வீருவின் மனத்துணிவும், வாழ்க்கை பற்றிய அவரின் அணுகுமுறையும்தான் அவரது வெற்றிக்குக் காரணம். நான் 281 ரன்கள் அடித்த போட்டி இடம்பெற்ற டெஸ்ட் தொடருக்குப் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாங்கள் ஆடினோம். அப்போது ஒருமுறை சாப்பிடும்போது வீரு, ‘லட்சுமண் அண்ணே... நீங்கள் முச்சதத்தைத் தவற விட்டுவிட்டீர்கள். ஆனால் நான் டெஸ்டில் அதை அடிப்பேன்’ என்றார். அப்போது அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடியிருக்கவில்லை. ஆனால் சொன்னபடியே அவர் முச்சதம் விளாசியதும் என்னிடம், ‘நான் அப்பவே சொன்னேன்ல...’ என்றார்.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் நீங்கள் இடம்பெறாததில் ஏமாற்றம் அடைந்தீர்களா?

ஆம். நான் மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் அடைந்தேன். அணியில் இடம்பெறத் தகுதியானவன் என்று நான் நினைத்திருந்தேன். அதனால்தான் அவ்வளவு வருத்தம். ஏறக்குறைய கிரிக்கெட்டை விட்டே விலகும் முடிவுக்கு வந்துவிட்டேன். நான் இரண்டு மாத காலத்துக்கு அமெரிக்கா சென்றுவிட்டேன். அங்கு எனது சிறுவயது நண்பர்களுடன் நாட்களைக் கழித்தேன். அவர்கள் அங்கே டாக்டர்களாகவும் என்ஜினீயர்களாகவும் இருக்கிறார்கள். கிரிக்கெட் பற்றி அதிகம் அறியாதவர்கள். அவர்களுடன் உறவாடித்தான் மீண்டும் நான் கிரிக்கெட்டுக்கு என்னை மீட்டுக் கொண்டேன்.

மேலும் செய்திகள்