விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி பீகாரை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பதிவு செய்தது.

Update: 2019-09-29 05:59 GMT
ஜெய்ப்பூர்,

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் தனது முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், சர்வீசஸ் அணிகளை துவம்சம் செய்தது. இந்த நிலையில் தமிழக அணி தனது 3-வது லீக்கில் பீகார் அணியை ஜெய்ப்பூரில் நேற்று எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பீகார் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபுல் குமார் சதம் (110 ரன்) அடித்தார். அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 75 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை (22.2 ஓவர்) பறிகொடுத்து தடுமாறியப்போதிலும் பாபா அபராஜித்தும், ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். தமிழக அணி 46.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 218 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. பாபா அபராஜித் 52 ரன்களுடனும், விஜய் சங்கர் 91 ரன்களுடனும் (88 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

பெங்களூருவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் கர்நாடகா-கேரள அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 49.5 ஓவர்களில் 294 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 131 ரன்கள் (122 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அசத்தினார். கேப்டன் மனிஷ் பாண்டே 50 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.

பின்னர் 295 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட கேரளா 46.4 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் மூலம் கர்நாடகா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேரள அணியில் விஷ்ணு வினோத் சதமும் (104 ரன்), சஞ்சு சாம்சன் அரைசதமும் (67 ரன்) அடித்த போதிலும் பலன் இல்லை.

பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் சத்தீஷ்கார் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பைக்கு அதிர்ச்சி அளித்தது. இதில் ஆதித்ய தாரே (90 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (50 ரன்), சூர்யகுமார் யாதவ் (81 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் மும்பை அணி நிர்ணயித்த 318 ரன்கள் இலக்கை சத்தீஷ்கார் அணி 49.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 22 வயதான அமன்தீப் காரே 117 ரன்கள் (94 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

மேலும் செய்திகள்