விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: திரிபுரா அணியை வீழ்த்தியது குஜராத்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுராவை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது.

Update: 2019-10-01 00:00 GMT
பெங்களூரு,

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் திரிபுரா-குஜராத் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த திரிபுரா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 305 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக பார்கவ் மிராய் 125 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய திரிபுரா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களே எடுத்தது. இதனால் குஜராத் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிலின்ட்குமார் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரது சதம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை. 3-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு- காஷ்மீர் அணியை தோற்கடித்தது. முதலில் ஆடிய ஜம்மு-காஷ்மீர் அணி 48.2 ஓவர்களில் 169 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய பெங்கால் அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் அணி பெற்ற 2-வது வெற்றி இது.

இன்னொரு லீக் ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தியது.

முதலில் ஆடிய பீகார் அணி 40.4 ஓவர்களில் 137 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனை அடுத்து ஆடிய மத்தியபிரதேச அணி 27.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 4-வது ஆட்டத்தில் ஆடிய மத்தியபிரதேச அணிக்கு 2-வது வெற்றி கிட்டியது.

மேலும் செய்திகள்