விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் கேரள வீரர் சஞ்சு சாம்சன் 212 ரன்கள் குவித்து சாதனை

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் கேரள வீரர் சஞ்சு சாம்சன் 212 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

Update: 2019-10-12 22:37 GMT
ஜெய்ப்பூர்,

18-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி ஜெய்ப்பூரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நமன் ஓஜா தலைமையிலான மத்திய பிரதேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த தமிழக அணி 4 விக்கெட்டுக்கு 360 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் சதம் (147 ரன், 139 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்தார். விஜய் சங்கர் 90 ரன்களும் (93 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 65 ரன்களும் (28 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய மத்திய பிரதேச அணி 28.4 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தமிழக அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. தோல்வியையே சந்திக்காமல் தொடர்ந்து 8-வது வெற்றியை பெற்ற தமிழக அணி கால்இறுதியை உறுதி செய்தது.

கர்நாடக மாநிலம் ஆலூரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) கேரள அணி, கோவாவுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த கேரள அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ராபின் உத்தப்பாவும் (10 ரன்), விஷ்ணு வினோத்தும் (7 ரன்) 8-வது ஓவருக்குள் வெளியேற்றப்பட்டனர்.

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும், சச்சின் பேபியும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். ருத்ர தாண்டவமாடிய சஞ்சு சாம்சன் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். ரன்மழை பொழிந்த சஞ்சு சாம்சன் முதல் முறையாக இரட்டை சதத்தை எட்டினார். இன்னொரு பக்கம் சச்சின் பேபி 127 ரன்களில் (7 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் கேரளா 3 விக்கெட்டுக்கு 377 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 212 ரன்களுடன் (129 பந்து, 21 பவுண்டரி, 10 சிக்சர்) இறுதி வரை களத்தில் இருந்தார். சாம்சன்- சச்சின் பேபி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 338 ரன்கள் சேர்த்தனர். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 3-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.

பின்னர் ஆடிய கோவா அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 273 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் கேரளா 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை சஞ்சு சாம்சனின் இரட்டை சதம் வரலாற்று சாதனைகளுக்கு வித்திட்டது. ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட்டில் (சர்வதேச ஒரு நாள் மற்றும் முதல்தர ஒரு நாள் போட்டி இரண்டையும் சேர்த்து) இரட்டை சதம் நொறுக்கிய 6-வது இந்தியர் என்ற சிறப்பை 24 வயதான சஞ்சு சாம்சன் பெற்றார்.

ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர் (200* ரன்), ஷேவாக் (219), ரோகித் சர்மா (208*, 209, 264), ஷிகர் தவான் (248 ரன்), கரண் வீர் கவுஷல் (202) ஆகிய இந்தியர்கள் இச்சாதனை பட்டியலில் உள்ளனர்.

இதில் தெண்டுல்கர், ஷேவாக், ரோகித் சர்மா ஆகியோரின் இரட்டை சதங்கள் சர்வதேச போட்டியில் வந்தவை. ஷிகர் தவான் இந்திய ‘ஏ’ அணிக்காக 2013-ம் ஆண்டு பிரிட்டோரியாவில் நடந்த தென்ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்திருந்தார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமைக்குரிய உத்தரகாண்ட் அணியைச் சேர்ந்த கரண் வீர் கவுஷல் கடந்த ஆண்டு சிக்கிம் அணிக்கு எதிராக இச்சாதனையை படைத்திருந்தார். லிஸ்ட் ஏ போட்டியில் 3-வது பேட்டிங் வரிசையில் இரட்டை செஞ்சுரி அடித்த முதல் இந்தியர் சாம்சன் ஆவார்.

மேலும் செய்திகள்