முதல்தர கிரிக்கெட்டில் ஸ்டீவன் சுமித்தின் மந்தமான சதம்

முதல்தர கிரிக்கெட்டில் ஸ்டீவன் சுமித் மந்தமான சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார்.

Update: 2019-11-12 23:16 GMT
சிட்னி,

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் 51 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முதல்தர கிரிக்கெட்டில் அதற்கு நேர்மாறாக மந்தமாக விளையாடி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சிட்னியில் நடந்து வரும் மார்ஷ் ஷெப்பீல்டு ஷில்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூ சவுத்வேல்ஸ் அணிக்காக களம் இறங்கிய ஸ்டீவன் சுமித் 290 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரது 42-வது சதமாகும். முதல்தர கிரிக்கெட்டில் (டெஸ்ட் போட்டியும் இதில் அடங்கும்) அவரது மெதுவான சதமாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடிக்க 261 பந்துகள் எடுத்துக் கொண்டதே அவரது ஆமைவேக சதமாகும்.

சதத்திற்கு பிறகு சுமித் (103 ரன், 295 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) ஸ்டோனிஸ் வீசிய ஷாட்பிட்ச் பந்தை ‘அப்பர்கட்’ செய்ய முயற்சித்த போது ஸ்டம்பை ஒட்டி நின்ற விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் கேட்ச் செய்தார். நியூ சவுத் வேல்ஸ் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 444 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

மேலும் செய்திகள்