களத்தில் ஜொலிக்காவிட்டால் ரிஷாப் பண்டை கிண்டல் செய்யாதீர்கள் - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்

களத்தில் ஜொலிக்காத போது விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டை கிண்டல் செய்யாதீர்கள் என்று இந்திய கேப்டன் கோலி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-12-05 22:45 GMT
ஐதராபாத், 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இளம் வீரர் ரிஷாப் பண்டின் திறமை மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. கடினமாக உழைத்து களத்தில் நன்றாக செயல்படுவது வீரரின் பொறுப்பு. அதே சமயம் எங்களது பொறுப்பு என்னவென்றால், அவருக்கு போதுமான வாய்ப்பு கொடுத்து, ஆதரவளித்து ஊக்கப்படுத்துவது தான்.

ஏற்கனவே ரோகித் சர்மா சொன்னது போல், அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் தனியாக விட்டு விடுங்கள். தனிநபராக வெற்றி தேடித்தரக்கூடிய மேட்ச் வின்னர் அவர். அவர் நல்ல நிலைக்கு வந்து விட்டால், அதன் பிறகு அவர் மீதான உங்களது எண்ணம் மாறி விடும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் எப்படி அசத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்து இருப்பீர்கள். அதற்கு காரணம், பதற்றமின்றி, ரிலாக்சாக விளையாடியது தான். எனவே சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரை தனிமைப்படுத்தக்கூடாது. அவருக்கான நல்ல சூழலை உருவாக்க நாங்கள் உள்ளோம்.

களத்தில் அவர் ஏதாவது வாய்ப்பை தவற விட்டாலோ அல்லது சோபிக்காவிட்டாலோ, டோனி வேண்டும்...டோனி வேண்டும்.... என்று குரல் எழுப்பி அவரை கிண்டல் செய்யாதீர்கள் என்று ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த மாதிரி நடந்து கொள்வது மரியாதை இல்லை. யாருக்கும் இந்த மாதிரி நிலைமை வரக்கூடாது. தேசத்துக்காக விளையாடும் போது, அவர் என்ன தவறு செய்கிறார் என்பது குறித்து எப்போது சிந்திப்பதை விட்டுவிட்டு உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு மட்டுமே போட்டி நிலவுகிறது. மற்றபடி கிட்டத்தட்ட மூன்று பேர் தங்களது இடத்தை உறுதி செய்து விட்டனர். அந்த ஒரு இடத்திற்கு ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. யார் வாய்ப்பை பெறப்போகிறார்கள் என்பதை போக போக பார்க்க வேண்டும்.

புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள். 20 ஓவர் கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். இப்போது வந்துள்ள தீபக் சாஹரும் உண்மையிலேயே நன்றாக பந்து வீசுகிறார். முகமது ஷமியும் அணிக்கு திரும்பியுள்ளார். ஷமி பந்து வீச்சில் தனது உயரிய நிலையை எட்டி விட்டால், ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் மிகவும் உதவிகரமாக இருப்பார்.

இவ்வாறு கோலி கூறினார்.

மேலும் செய்திகள்