20 ஓவர் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; 2-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்

தொடரை வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்றிரவு வெஸ்ட் இண்டீசுடன் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மோதுகிறது.

Update: 2019-12-07 23:46 GMT
திருவனந்தபுரம்,

தொடரை வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்றிரவு வெஸ்ட் இண்டீசுடன் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மோதுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் குவித்த போதிலும் அந்த இலக்கை இந்தியா 8 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து மிரட்டியது. இந்திய கேப்டன் விராட் கோலி 94 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார். ஆனால் பந்து வீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது. நிறைய கேட்ச்சுகளை தவற விட்டனர். அதில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் 2 இடங்களில் இந்தியாவின் ரோகித் சர்மா (2547 ரன்), விராட் கோலி (2544 ரன்) உள்ளனர். ரோகித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பாரா அல்லது அவரை கோலி இந்த ஆட்டத்தில் முந்துவாரா? என்பதை பார்க்க சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். அனேகமாக இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது என்று தெரிகிறது.


 


உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 10 ஆட்டங்களில் 9-ல் தோல்வி அடைந்திருக்கிறது. ஐதராபாத் போட்டியில் ஹெட்மயர், பொல்லார்ட், இவின் லீவிஸ் அதிரடி காட்டி ரன்மழை பொழிந்தனர். ஆனால் மெகா ஸ்கோர் குவித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறும் போது, ‘தொடக்க ஆட்டத்தில் எங்களது பேட்ஸ்மேன்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். ஆனால் பந்து வீச்சில் தான் கட்டுக்கோப்பு இல்லை. அது தான் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இந்த ஆட்டத்தில் எக்ஸ்டிரா வகையில் மட்டும் 14 வைடு உள்பட 23 ரன்களை வாரி வழங்கினோம். இந்த எக்ஸ்டிராவை பாருங்கள். அதற்குரிய பந்துகளை கூடுதலாக வீசியிருக்கிறோம். இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக இவ்வளவு எக்ஸ்டிரா வழங்கினால், அதனால் பாதிப்பு தான் உருவாகும். இதே போல் சில நோ-பால்களும் வீசினோம். இவற்றை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விதிக்கப்பட்டிருந்த 4 போட்டி தடை முடிந்து விட்டதால் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் இன்றைய ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது.

திருவனந்தபுரத்தில் 20 ஓவர் போட்டி நடப்பது இது 2-வது முறையாகும். 2017-ம் ஆண்டு இங்கு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு 8 ஓவர்களாக நடத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது. இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபட வாய்ப்புள்ளது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர்.

வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், லென்டில் சிமோன்ஸ், பிரன்டன் கிங், ஹெட்மயர், பொல்லார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர், கேரி பியர், கேஸ்ரிக் வில்லியம்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஹேடன் வால்ஷ்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.



 



‘வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்’ - லோகேஷ் ராகுல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய லோகேஷ் ராகுல் 40 பந்துகளில் 62 ரன்கள் திரட்டினார். ஷிகர் தவான் காயத்தால் விலகியதால் ராகுலுக்கு மீண்டும் தொடக்க வீரர் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

அவர் கூறுகையில், ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. அது பற்றி சிந்திக்காமல், சில தொடர்களுக்கு பிறகு மறுபடியும் தொடக்க வீரராக கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதை எதிர்நோக்குகிறேன். இன்றைய ஆட்டம் நன்றாக அமைந்தது. பந்தை அடித்த விதமும் சிறப்பாக இருந்தது. பந்து பேட்டின் நடுப்பகுதியில் பட்டு ஓடியது. 20 ஓவர் உலக கோப்பை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இதே போன்று விளையாட முடியும் என்று நம்புகிறேன். உலக கோப்பைக்கு முன்பாக இன்னும் நிறைய ஆட்டங்கள் இருக்கிறது.

இந்த மைதானத்தில் (ஐதராபாத்) மின்விளக்குகள் தாழ்வான நிலையில் உள்ளன. இந்த வெளிச்சத்தில் சில நேரம் பந்தை சரிவர பார்க்க முடியவில்லை. அதனால் தான் சில கேட்ச்சுகளை நழுவ விட்டோம். ஆனால் இங்கு நாங்கள் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம் என்பதால் இது பற்றி தெரியும். ஒரு அணியாக இதை எல்லாம் எங்களது தவறுகளுக்கு காரணமாக சொல்லமாடடோம்’ என்றார்.

மேலும் செய்திகள்