விஜய் ஹசாரே கோப்பை:கேரள அணியை வீழ்த்தி தமிழ்நாடு வெற்றி
ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் தமிழ்நாடு - கேரளா அணிகள் மோதின.;
ஆமதாபாத்,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பெற்ற 23 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின.
ஆமதாபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) தமிழ்நாடு - கேரளா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில் ஜெகதீசன் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். பொறுப்புடன் விளையாடி அவர் சதமடித்தார் .இதனால் தமிழ்நாடுஅணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்தது. கேப்டன் என்.ஜெகதீசன் 139 ரன்கள் (126 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார்.
கேரளா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஈடன் ஆப்பிள் டாம் 6 விக்கெட்டுகளை அள்ளினார். அடுத்து ஆடிய கேரளா 40.2 ஓவர்களில் 217 ரன்னில் அடங்கியது. இதனால் தமிழக அணி 77 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்றது. ஏற்கனவே தொடர்ந்து 4 தோல்வி கண்டு காலிறுதி வாய்ப்பை இழந்து விட்ட தமிழக அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.