இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியுடன் ஓய்வு பெற முடிவா? ஹர்பஜன்சிங் பதில்

20 ஆண்டுகள் நல்லதொரு பயணத்தை மேற்கொள்ள அனுமதித்த கடவுளுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

Update: 2020-07-18 21:30 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான 40 வயது ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘நீங்கள் எனது திறமையை பரிசோதிக்க விரும்பினால், சிறந்தவராக கருதும் இளம் வீரரை என் முன் நிறுத்துங்கள். அவரது திறமையுடன் நான் போட்டியிட தயார். பீல்டிங் செய்யும் போது பந்தை கால்களுக்கு இடையில் தவற விட்டாலோ? அல்லது குனிந்து பந்தை பிடிக்க முடியாமல் தடுமாறினாலோ? வயது குறித்து பேசலாம். ஆனால் நான் இந்திய அணியின் சீருடையை அணிந்து சுமார் 800 நாட்களுக்கு மேல் களத்தில் நின்று விளையாடி இருக்கிறேன். நான் சாதனையாளன். எனக்கு யாருடைய அனுதாபமும் தேவையில்லை. எனக்கு அதிக வயதாகி விட்டது என்று உணர வைக்க முயற்சிக்கிறீர்கள். அசாருதீன் கேப்டனாக இருக்கையில் நான் இந்திய அணியில் விளையாட தொடங்கினேன். 20 ஆண்டுகள் நல்லதொரு பயணத்தை மேற்கொள்ள அனுமதித்த கடவுளுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

இது தான் எனக்கு கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்கும் என்று சொல்லமாட்டேன். எனது உடல் நிலையை பொறுத்து தான் முடிவெடுப்பேன். கடந்த 4 மாதங்களாக பயிற்சி, ஓய்வு, யோகா ஆகியவற்றின் மூலம் 2013-ம் ஆண்டில் இருந்தது போன்ற புத்துணர்ச்சியை பெற்று இருக்கிறேன். அந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நான் 24 விக்கெட்டுகள் வீழ்த்தினேன்’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பதிவு ஒன்றில், ‘கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் ஒருவரின் செயல்பாட்டை கணக்கில் கொண்டு தான் விளையாட்டு விருது வழங்கப்படும். அதன்படி பார்த்தால் நான் ‘கேல்ரத்னா’ விருதுக்கு தகுதி படைத்தவன் கிடையாது என்பது தான் உண்மையாகும். அதனால் எனது பெயரை விருதுக்காக பரிந்துரைத்ததை திரும்ப பெறும்படி பஞ்சாப் மாநில அரசை கேட்டுக்கொண்டேன். விருதுக்கான பரிந்துரையை பஞ்சாப் அரசு திரும்ப பெற்றதில் தவறு எதுவும் கிடையாது. இதில் யூகத்துக்கு இடமளிக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்