வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை

சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை கிளென் பிலிப்ஸ் படைத்துள்ளார்.

Update: 2020-11-29 20:52 GMT
மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2-வது 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. 

இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்து மிரள வைத்தது. 7-வது ஓவரில் களம் இறங்கி ரன்மழை பொழிந்த 23 வயதான கிளென் பிலிப்ஸ் 46 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். 

இதற்கு முன்பு காலின் முன்ரோ 2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 47 பந்துகளில் சதத்தை எட்டியதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்த பிலிப்ஸ் 108 ரன்களில் (51 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்) ஆட்டம் இழந்தார். டிவான் கான்வே 65 ரன்களுடன் (37 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். 

அடுத்து களம் கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 166 ரன்களே எடுத்தது. 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது.

மேலும் செய்திகள்