3 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் தனது விக்கெட் கணக்கை துவங்கிய நடராஜன்

ஆஸ்திரேலியாவுடனான இன்றைய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Update: 2020-12-04 12:53 GMT
கான்பெர்ரா,

தனது முதல் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய தமிழக வீரர் நடராஜன், முதல் ஆட்டத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161- ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் இடது கை பந்துவீச்சாளர் நடராஜன் வீசிய 11வது ஓவரில் க்ளென் மேக்ஸ்வெல் (2 ரன்கள்) எல்.பி.டபில்யூ முறையில் ஆட்டமிழந்தார். இது சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் நடராஜனின் முதல் விக்கெட் ஆகும். அடுத்ததாக நடராஜன் வீசிய 15வது ஓவரில் டி ஆர்சி ஷார்ட்(34 ரன்கள்) ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து 19வது ஓவரில் நடராஜன் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் பவுல்ட் (1 ரன்) ஆனார்.

இதன் மூலம் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் தனது விக்கெட் கணக்கை துவங்கியுள்ளார். 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இந்திய அணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்த நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியாவுடனான 3-வது ஒருநாள் போட்டியில் நடராஜன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்