6 பந்தில் 6 சிக்சர் : இலங்கை அணியை பந்தாடிய பொல்லார்ட்

அகிலா தனஞ்சயா பந்து வீச்சில் பொல்லார்ட் ஒரே ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.

Update: 2021-03-04 05:02 GMT
Image courtesy : AFP/Getty Images
கொழும்பு

இலங்கை அணிக்கெதிரான முதல் 20 ஓவர் போட்டியில் மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிரன் பொல்லார்ட் 6 பந்துக்கு ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இலங்கை அணி மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நேற்று முதல் 20 ஓவர்  போட்டி நடைபெற்றது, முதலில் பேட்டிங் செய்த  இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. அந்த்அணியில் அதிக பட்சமாக  பதும் நிஷன்க்கா 39 ரன்கள், நிரோஷன் டிக்வெல்லா 33 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவு அணியில், அதிகபட்சமாக ஒபேட் மேகாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

அதைத் தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணியின் தொடக்க வீரரான லிண்டன் சிம்மன்ஸ் 26 ரன்களிலும் , இவின் லிவிஸ் 28 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.  கிறிஸ் கெய்ல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.சுழற்பந்து வீச்சாளர்,  அகிலா தனஞ்சயா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

அதன் பின் ஜேஷன் ஹோல்டருடன் ஜோடி சேர்ந்த கிரன் பொல்லார்ட் இலங்கை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.குறிப்பாக அகிலா தனஞ்சயா பந்து வீச்சில் பொல்லார்ட் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.   வெறும் 11 பந்தில் 38 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவு அணியின் வெற்றிக்கு உதவினார்.ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸர் அடித்ததன் மூலம், தென் ஆப்பிரிக்கா வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் வரிசையில் தற்போது கிரன் பொல்லார்ட் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே போட்டியில் ஹாட்ரிக் மற்றும்  ஒரே ஓவரில்  6 சிக்சர்கள் அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.


மேலும் செய்திகள்