3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி

முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்தது.

Update: 2021-03-13 04:16 GMT
லக்னோ, 

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பூனம் ரவுத் 77 ரன்களும், கேப்டன் மிதாலிராஜ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா தலா 36 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீராங்கனை லிசல் லீ அதிரடியில் மிரட்டினார். ஒரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் லிசல் லீ அபாரமாக விளையாடி சதம் அடித்தார். தென்ஆப்பிரிக்கா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது போது மழை குறுக்கிட்டது. அப்போது லிசல் லீ 132 ரன்களுடன் (131 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு அந்த சமயத்தில் 218 ரன்களே போதுமானதாக இருந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

மேலும் செய்திகள்