100 பந்து கிரிக்கெட்: ஓவல், சதர்ன் அணிகள் ‘சாம்பியன்’

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் புதுமையான தி ஹன்ரட் (100 பந்து வடிவிலான கிரிக்கெட்) கிரிக்கெட் போட்டி அங்குள்ள பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது.

Update: 2021-08-22 18:17 GMT
லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் புதுமையான தி ஹன்ரட் (100 பந்து வடிவிலான கிரிக்கெட்) கிரிக்கெட் போட்டி அங்குள்ள பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஓவல் இன்வின்சிபில்ஸ்-சதர்ன் பிரேவ் அணிகள் லண்டன் லார்ட்சில் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த ஓவல் அணி 100 பந்தில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சதர்ன் அணி 98 பந்தில் 73 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் மரிஜானே காப் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஓவல் அணி, முதலாவது தி ஹன்ரட் கோப்பையை கைப்பற்றியது.

இதன் ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் சதர்ன் பிரேவ்- பர்மிங்காம் போனிக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான சதர்ன் பிரேவ் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பால் ஸ்டிர்லிங் 36 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 61 ரன்களும், ரோஸ் ஒயிட்லி 19 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 44 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய மொயீன் அலி தலைமையிலான பர்மிங்காம் அணியால் 100 பந்தில் 5 விக்கெட்டுக்கு 136 ரன்களே எடுக்க முடிந்தது. லியாம் லிவிங்ஸ்டனின் (46 ரன், 19 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்-அவுட் பர்மிங்காம் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. சதர்ன் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது.

மேலும் செய்திகள்