கங்குலி போல் உருவாக வேண்டும் என்பதற்காக இடதுகை பேட்ஸ்மேனாக மாறினேன்: வெங்கடேஷ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போல் உருவாக வேண்டும் என்பதற்காகவே தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றியதாக கொல்கத்தா அணியின் புதிய வரவு வெங்கடேஷ் அய்யர் கூறியுள்ளார்.

Update: 2021-09-24 22:43 GMT
கலக்கிய வெங்கடேஷ்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் வெங்கடேஷ் அய்யர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்களும் (7 பவுண்டரி, ஒரு சிக்சர்), மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 53 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) நொறுக்கி வெற்றியையும் எளிதாக்கினார். தனது முதல் இரண்டு ஐ.பி.எல். போட்டியிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து விட்ட வெங்கடேஷ் அய்யர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர். ஏலத்தில் அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்.

26 வயதான வெங்கடேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஐ.பி.எல்.-ல் எனது பயணம் கொல்கத்தா அணி மூலமே தொடங்க வேண்டும் என்று விரும்பினேன். காரணம், எனது மானசீக குரு சவுரவ் கங்குலி. ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்கு அவர் கேப்டனாக இருந்ததால், கொல்கத்தா அணி என்னை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். அது போலவே அவர்கள் என்னை ஏலத்தில் எடுத்த போது கனவு தருணம் போல் இருந்தது.

நான் கங்குலியின் மிகத் தீவிர ரசிகர். அவருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவன். எனது பேட்டிங் திறமையில் மறைமுகமாக கங்குலி முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது பேட்டிங், சிக்சர் விளாசும் விதம், பந்து வீச்சு எல்லாமே என்னையும் அறியாமல் எனக்குள் பதிவாகி கொண்டே இருந்தது. அதனால் தான் சிறு வயதில் வலதுகை பேட்ஸ்மேனாக இருந்த நான் முற்றிலும் அவரை போல் ஆக வேண்டும் என்பதற்காக பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொண்டு இடது கை பேட்ஸ்மேனாக மாறினேன்.

ரஜினிகாந்தின் ரசிகர்

நான் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். எனது வாழ்க்கையில் ஒரே சூப்பர் ஸ்டார் அவர் தான். அவரது அனைத்து படங்களையும் தவறாமல் பார்ப்பேன். ஒரு முறை இந்தூரில் இருந்து சென்னைக்கு சென்று அங்குள்ள ஒரு தியேட்டரில் ரஜினியின் புதிய படத்தை பார்த்து விட்டு திரும்பினேன். அவரை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்பது ஆசை. அது ஒரு நாள் நடக்கும். அந்த நாள் எனது வாழ்வில் மிகப்பெரிய தருணமாக இருக்கும். ‘என் வழி...தனி வழி’ என்ற அவரது வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த வசனம் எனக்குள் எப்போதும் ஊக்கம் கொடுக்கும். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெங்கடேஷ், இந்தூரில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்ப உறுப்பினர்களில் பலர் டாக்டர்கள், என்ஜினீயர், ஆசிரியர்களாக உள்ளனர். இவரையும் படிப்பு மூலம் உயர்ந்த இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் எம்.பி.ஏ. படித்துள்ள அவர் கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய வேலை வாய்ப்பை உதறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்